

ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பல சோதனைகளை தந்த போதிலும் தடைக்கற்களை தகர்த்தெறிந்து, படிக்கற்களாக மாற்றி நம் வெற்றிப் பயணத்தைத் தொடருவோம் என்று தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேமுதிகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா, என் மீதும், என் மனைவி மீதும், தேமுதிகவினர் மீதும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல அவதூறு வழக்குகள் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதை, சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளும் ஜெயலலிதாவை, உச்ச நீதிமன்றமே கடுமையாக கண்டித்துள்ளது.
அரசு செலவில், அரசு வழக்கறிஞர்களை போஸ்ட் மேன் போல் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆளுங்கட்சியால் எதிர்கட்சிகள் மீது இத்தனை வழக்குகள் போடப்பட்டதில்லை என்றும், இதுவரை எத்தனை அவதூறு வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் போடப்பட்டுள்ளது என்பதை இரண்டு வாரங்களுக்குள் ஜெயலலிதாவே பதில் அளிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஒட்டு மொத்த மக்களும் ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறை மீதும் பலமடங்கு நம்பிக்கை கொள்ளும் அளவு அனைவராலும் வரவேற்கத்தக்க நீதியை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
பல அவதூறு வழக்குகள் தமிழகம் முழுவதும் போடப்பட்ட போதும், சட்டத்தை மதித்து கையொப்பம் இட வந்த ஒவ்வொரு நாளும் எங்களுக்காக வந்திருந்த மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப பல இடையூறுகளைத் தொடர்ந்து ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பல சோதனைகளைத் தந்த போதிலும் தடைக்கற்களைத் தகர்த்தெறிந்து, படிக்கற்களாக மாற்றி நம் வெற்றிப் பயணத்தைத் தொடருவோம் என்ற உங்கள் ஒவ்வொருவரின் உறுதி ஈடு இணையற்றது.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கிணங்க, எந்த பலவீனங்களுக்கும் இடமளிக்காமல் தேமுதிக தொடங்கிய போது நாம் எடுத்து கொண்ட லட்சியத்தை வெல்லும் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியோடு பயணிப்போம்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.