

அரசு மருத்துவமனைகளில் தொடங்கிய வேகத்தில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம் முடங்கிப்போனதால், டிஜிட்டல் இந்தியா கனவு திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.
2012-ம் ஆண்டில் சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் எலி கடித்து சிசு மரணம் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இல்லாததே இதற்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அப்போ தைய சுகாதாரத்துறை அமைச் சரும், அதிகாரிகளும் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்ட போ து, தமிழகத்தில் அரசு மருத்து மனைகளில் பல மருத்துவர்கள் பணியில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைய டுத்து, உடனடியாக தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக ளிலும் 2012 அக்டோபர் மாதத்தில் இருந்து பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக் கான ரூபாய் செலவில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு இயந் திரங்களை பொருத்தி, அவசர அவசரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சில மாதங்கள் மட்டும், இந்த நடைமுறை அமலில் இருந்த நிலையில், மருத்துவர்களின் எதிர்ப்பால் அரசு பின்வாங்கியது. அதனால், தொடங்கிய வேகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முடங்கியது. மக்கள் வரிப் பணத் தில் லட்சக்கணக்கான ரூபாய் செல விடப்பட்டு நிறுவப்பட்ட நூற்றுக் கணக்கான வருகைப் பதிவேடு இயந்திரங்கள் நான்கு ஆண்டுகளுக் கும் மேலாக அரசு மருத்துவமனை களில் காட்சிப் பொருளாகவே உள்ளன.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதார செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது:
பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நிறுத்தப்பட்டபின், இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்பதைக் கண்டறிய குழு ஒன்றை அமைத்தனர். ஆனால், அக்குழுவில் அரசு மருத்துவர்களே நியமிக்கப்பட்டதால் திட்டத்தையே நீர்த்துப் போக செய்து விட்டனர்.
அரசு மருத்துவமனைகளை நம்பி தினந்தோறும், லட்சக்கணக் கான ஏழை நோயாளிகள் வருகின் றனர். அவர்களுக்கு முழு அளவில் மருத்துவர்களின் கவனிப்புடன் கூடிய சிகிச்சை கிடைப்பதில்லை. அரசு மருத்து வமனைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பை விளிம்புநிலை மக்களுக்கு அரசுத் துறையினர் ஏற்படுத்தவில்லை. இந்த பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அனேக அரசு மருத்துவர்கள் பணியில் தாமதமாக வருவது, விடுப்பு எடுத்துக்கொள்வது தொடர்கதையாகி உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நோயாளிகளின் உயிரிழப்புகளும், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் ஆர்ப்பாட்டம், நீதிமன்ற வழக்குகள் என போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தியாவே டிஜிட்டல் மய மாகிவரும் நிலையில், மக்களின் உயிர் காக்கும் சுகாதாரத் துறை யில் அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதி வேட்டை நடைமுறையில் சாத்தியப் படுத்த முன்வராதது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
டெல்லி, மகாராஷ் டிரா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு மருத்துவ மனைகளில் பயோமெட்ரிக் திட் டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தமிழகத் தில் கொண்டு வந்த திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்கியது மக்கள் சார்பு நடவடிக்கையாகத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர்களுக்கு சாத்தியமில்லை
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறியதாவது:
அரசின் எல்லா துறைகளிலும் பயோமெட்ரிக் நடைமுறை இல்லை. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அறுவை சிகிச்சை, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், வாரத்தில் 6 நாட்கள் ஒரே மாதிரி நேரத்தில் மருத்துவர்களுக்கு பணி நேரம் வராது.
ஒரே மருத்துவருக்கு ஒவ்வொரு நாளும், மாறிமாறி பணி நேரம் வரும். அதனால், அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறை சாத்தியமில்லை என அரசு சார்பில் அமைத்த குழு, பயோமெட்ரிக் திட்டத்தை நிராகரித்துள்ளது என்றார்.