

தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்குமான இட ஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கல்வி, பாசனம், தொழில்வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தெலங்கானா சமூக நீதியிலும் புதிய புரட்சி படைத்திருக்கிறது.
பிற்படுத்தபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினத்தவருக்கான இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக முறையே 12%, 10% ஆக உயர்த்துவதற்கான மசோதா அம்மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலங்கானா பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு) சட்ட முன்வரைவு-2017 என்ற தலைப்பிலான மசோதா தெலங்கானா சட்ட மேலவையில் அடுத்த சில நாட்களில் நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டமாகும்.
தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை சமூகநீதி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்காக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆந்திராவின் ஒருபகுதியாக இருந்த தெலங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த ஆந்திராவிலும் இருந்த இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரில் பெரும்பகுதியினர் தெலங்கானாவில் இருப்பதால் அதற்கேற்ற வகையில் இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
தெலங்கானாவின் மக்கள் தொகையில் 12% உள்ள இஸ்லாமியருக்கு 4% இட ஒதுக்கீடும், 10% உள்ள பழங்குடியினருக்கு 6% இட ஒதுக்கீடும் மட்டுமே வழங்குவது சமூக அநீதி என்பதால் அப்பிரிவினருக்கு மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை தெலங்கானா அரசு அதிகரித்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நீதிபதி சச்சார் குழு பரிந்துரை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தெலங்கானா அதை செய்திருப்பது பாராட்டத்தக்கது.
அடுத்தகட்டமாக தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக 15 விழுக்காட்டிலிருந்து 16% ஆக உயர்த்தப்படும். அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் உயர்த்தப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்திருக்கிறார். இதன்மூலம் தெலங்கானா மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கோட்பாட்டை நோக்கி பயணிக்கிறது. இது தான் முழுமையான, பாரபட்சமற்ற சமூகநீதியை ஏற்படுத்துவதற்கான வழியாகும்.
தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை மூலம் அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 50 % என்பதில் இருந்து 62 % ஆக அதிகரிக்கிறது. இது 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். எனவே, தமிழகத்தின் 69 % இட ஒதுக்கீட்டு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பது போல, தெலங்கானா சட்டத்தையும் சேர்க்க வேண்டும் என சந்திரசேகர ராவ் கோரியுள்ளார். ஆனால், இதை மத்திய அரசு அனுமதிக்காது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். அவரது இந்த வாதம் சமூகநீதிக்கு எதிரானது; ஏற்க முடியாதது.
தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்களின் சமூக பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக பேசிய நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள வெங்கையா நாயுடு இதை எதிர்ப்பது சரியல்ல.
தமிழகத்தின் சட்டத்தைப் போலவே தெலங்கானா பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு சட்டத்தையும் ஒன்பதாவது அட்டவணையில் மத்திய அரசு சேர்க்க வேண்டும்.
தெலங்கானா சட்டத்திலிருந்து தமிழக அரசும் பாடம் படிக்க வேண்டும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சுதந்திரம் அளித்தது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை எத்தனை விழுக்காடு உள்ளதோ, அதற்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் அத்தீர்ப்பில் பொதிந்திருக்கும் பொருள் ஆகும். இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் சில வடகிழக்கு மாநிலங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இட ஒதுக்கீட்டை அனுமதித்து வருவது இதை உறுதி செய்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்குமான இட ஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.