அரசினர் விடுதியில்தான் 130 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசினர் விடுதியில்தான் 130 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரை காணவில்லை அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பனிப்போர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெய்சந்திரன், மதிவாணன் அடங்கிய அமர்வு முன் தனித்தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், 'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. என்ன ஆனார்கள் எனத் தெரியாமல் தொகுதி மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களின் கைபேசிகள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. அவர்களது உறவினர்களும் குழப்பதில் உள்ளனர். எனவே, அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜேந்திரன், "130 எம்.எல்.ஏ.க்களும் அரசினர் விடுதியில்தான் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இது தவறான குற்றச்சாட்டு. அவர்களை யார் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்" என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அரசு தரப்பு வழக்கறிஞரே தகுந்த விளக்கத்தை கொடுத்துவிட்டதால் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறதோ அப்போது நீதிமன்றம் விசாரிக்கும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in