

ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் விளம்பர தூதராக இருந்த நடிகை த்ரிஷாவுக்கும் எதிர்ப்பு வலுத்தது. காரைக்குடியில் த்ரிஷாவின் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு ஆர் வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மேலும் தூண்டிவிடும் வகையில் த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்கள் வெளியாகின. இது பரபரப்பை ஏற்படுத்தியதால், த்ரிஷாவுக்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. தனது ட்விட்டர் பக்கத்தில் விஷமிகள் ஊடுருவி, தான் கூறியதுபோல தவறான தகவல்களைப் பதிவு செய்துவிட்டதாக த்ரிஷா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், த்ரிஷாவின் தாய் உமா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை நேரில் சந்தித்து, ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உமா கூறியதாவது:
த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத் தில் ஊடுருவி தவறான தகவல் பதிவிட்டவர்களைக் கண்டுபிடிக்க வும், த்ரிஷாவின் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி புகார் கொடுத்தேன்.
வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெருநாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பீட்டா 2 ஆண்டு களுக்கு முன்பு ஏற்பாடு செய்தி ருந்த விளம்பரப் படத்தில் த்ரிஷா நடித்தார். பீட்டாவால் இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் த்ரிஷா அவ்வாறு செய்திருக்க மாட்டார். மற்றபடி, த்ரிஷா பீட்டா அமைப்பு டன் சேர்ந்து பெரிய அளவில் செயல்படவில்லை. தற்போது பீட்டாவை விட்டு த்ரிஷா விலகியே இருக்கிறார். நாங்களும் தமிழர்கள்தான். நாங்கள் ஜல்லிக் கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிட மும் பேசியுள்ளேன்.