

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் ஆனாலும் திமுக படுதோல்வி அடையும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, அரசியல் லாபத்துக்காக மு.க.ஸ்டாலின் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் ஆனாலும் திமுக படுதோல்வி அடையும். மக்கள் மத்தியில் அந்த கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்ற சூழல் உருவாகி ரொம்ப காலம் ஆகிவிட்டது.
அதிமுக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் போய்விடக்கூடாது என்ற கொள்கையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியின் ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கின்றனர். அதைத்தான் மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஊழல் பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. அவர் ஊழலை எல்லாம் மறைத்துவிட்டு எங்களைக் கேட்கிறார். சேகர் ரெட்டிக்கு மணல் கொடுத்தது ஓபிஎஸ்தான் என்கிறார். அரசு விதிமுறைப்படிதான் மணல் விற்கப்பட்டது எனவே,சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை'' என்றார் ஓ.பன்னீர்செல்வம்.