

அதிமுகவின் இரு அணிகளிடையே இன்று அல்லது நாளை பேச்சு வார்த்தை நடக்கும் என அதிமுக அம்மா கட்சியின் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் ஆர். வைத்திலிங்கம் தெரி வித்தார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்குவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இணைப்பு பேச்சுவார்த்தை உடனடி யாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அமாவாசை நல்ல நாள் என்பதால் நேற்றே பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்பட்டது. அதற்காகவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. ஆனால், எதிர்பார்த்தபடி நேற்று பேச்சு வார்த்தை நடக்கவில்லை.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், 2-வது நாளாக நேற்று நடந்தது. இதில் கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற் றனர். அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தலைமையிலும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையிலும் நடந்த இக்கூட் டத்தில், இரு அணிகள் இணைப்பு, கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல், பிரமாண பத்திரத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கூறும்போது, ‘‘இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நல்லவிதமாக சென்று கொண் டிருக்கிறது. சுமுகமாக பேச்சு வார்த்தை நடக்கும் என நம்பு கிறோம். தற்போது பேச்சுவார்த் தைக்கு வருவதாக தொலை பேசியில் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும்’’ என்றார்.
‘‘பேச்சுவார்த்தைக்கு ஏன் இவ்வளவு காலதாமதம்’’ என செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இரு தரப்பு பேச்சுவார்த்தை என்றால் அவர்களும் தங்களுக்குள் பேசி முடிவுக்கு வரவேண்டும். நாங்களும் கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் முதல்வருடன் பேசி முடிவுக்கு வரவேண்டும். எல்லாம் நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும்’’ என பதிலளித்தார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரமாண பத்திரத் தில் ஏதோ திருத்தங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், ‘‘சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் முதல்வர், அதேபோல தலைமை நிலையச் செயலாளரும் முதல்வர்தான். அந்த வாக்கியம் பிரமாண பத்திரத்தில் இல்லாமல் இருந்தது. அது சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.ராஜசேகரன் தலைமையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி நிர்வாகிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.