தமிழக சிறைகளில் இருந்து 2 ஆயிரம் கைதிகள் விடுதலை: சிறை அதாலத் மூலம் ஒரே நாளில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் நடத்தப்பட்ட ‘சிறை அதாலத்' மூலம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைகளில் நீண்ட நாட்கள் இருக்கும் விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விசாரணை ‘சிறை அதாலத்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், இளம் குற்றவாளிகளுக்கான ஒரு சிறை உட்பட 136 சிறைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 22 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். தற்போது 14 ஆயிரம் கைதிகள் வரை உள்ளனர். இதில் சுமார் 5 ஆயிரம் பேர் விசாரணைக் கைதிகள். விசாரணைக் கைதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியவர்கள் தவிர 3 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்பட்ட கைதிகளிடம் நீதிபதிகள் நேரடி விசாரணை நடத்தி வழக்குகளுக்கு உடனடி தீர்வு கண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதிகளுக்கு உடனடி அபராதம் விதித்தும் தண்டனை காலத்தைவிட நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டனர்.
புழல் சிறையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 50 மாஜிஸ்திரேட்கள் மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிபதி ராஜமாணிக்கம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது ஆகியோர் தலைமையில் சிறை அதாலத் நடந்தது. சிறு குற்றங்கள் செய்து நீண்ட நாள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை அபராதம் விதித்து விடுதலை செய்தனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை சுமார் 600 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இரவுக்குள் ஆயிரம் பேர் வரை விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட அனைத்து சிறைகளிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கைதிகள் வரை விடுதலை செய்யப்பட்டனர். சிறை அதாலத் மூலம் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு ஜாமினும் வழங்கப் பட்டது.
