Published : 25 Jun 2016 02:11 PM
Last Updated : 25 Jun 2016 02:11 PM

கொலைநகரமாக மாறிவிட்டதா தலைநகரம்?- முத்தரசன் கேள்வி

தமிழகத்தின் தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறிவிட்டதோ என மக்கள் அஞ்சும் வகையில் நித்தம் நித்தம் கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில், கூலிப்படைகளையும். சமூக விரோத கும்பலையும் ஒடுக்கி மக்கள் அச்சமின்றி வாழ்ந்திட உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறிவிட்டதோ என மக்கள் அஞ்சும் வகையில், படு பயங்கர கொலைகள் நித்தம், நித்தம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

வழக்கறிஞர்கள், பெண்கள் சமூக ஆர்வலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் எவ்வித அச்சமும் இன்றி கொலை செய்யப்படுகின்றனர்.கொலை செய்வதை தொழிலாகக் கொண்டு செயல்படும் கூலிப்படை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை செய்ய கூலிப்படையை பயன்படுத்துபவர்கள், கொலைக்காரர்களை காப்பாற்றவும், அவர்களின் குடும்பத்தினர்க்கு உரிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதுடன்,தண்டனை பெறாமல் தப்பிக்க செய்திடவும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சமூக விரோத கும்பலுக்கு சேவை செய்வதில் ஊழல் அதிகாரிகளும், அரசியல் செல்வாக்குமிக்க நபர்களும் வெட்கப்படுவதில்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இக்கும்பலின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சரியாக இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் கொள்ளலாம், தன்னைத் தானே அவர் பாராட்டிக் கொள்ள அவருக்கு உரிமையுண்டு.

ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்பதனை கடந்த இருபது தினங்களாக தலைநகர் சென்னையில் ஒன்றன் பின் ஒன்றாக தினந்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் உறுதிப் படுத்துகின்றன.தலைநகர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அண்மை காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பெறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் அச்சமின்ற வாழவும் அவர்களது உயிருக்கும், உடமைக்கும், உரிய பாதுகாப்பை வழங்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். கூலிப்படைகளையும். சமூக விரோத கும்பலையும் ஒடுக்கி மக்கள் அச்சமின்றி வாழ்ந்திட உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமாய் தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x