

தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இத்திட்டத்தின் தொடக்க விழா, காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் நேற்று நடந்தது.
அங்குள்ள ஏரியை தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 1,519 ஏரி, குளங் களை சீரமைக்கும் குடிமராமத்து திட்டப்பணிகள் ரூ.100 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணி கள் முழுவதும் நிறைவேறும் போது அதிகமான நீர் ஏரியில் சேமிக் கப்படும். அதன்மூலம், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு விவசாயத்தை செம்மைப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
மணிமங்கலம் ஏரியுடன் 57 ஏரிகள் சங்கிலித்தொடர்போல அமைந்துள்ளன. இதன் கொள் ளளவு 225 மில்லியன் கன அடி யாகும். ஆண்டு நீர்த் தேக்க அளவு 338 மில்லியன் கன அடியாகும். பாசன பரப்பு 2,079 ஏக்கராக உள்ளது. நீர்வள, நிலவள திட்டத்தில் ஏற்கெனவே முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
16,098 ஏரிகள்
தமிழகத்தில் 16,098 பொதுப் பணித்துறை ஏரிகள் உள்ளன. கட லோர மாவட்டங்களில் குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய ஏரி கள் அதிகமாக உள்ளன. காஞ்சிபுரத்தில் மட்டும் 961 ஏரிகள் உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு, தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், பல மாவட்டங்களில் வறட்சி நிலவு கிறது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,247 கோடி வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளை அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்.