Published : 12 Sep 2014 12:02 PM
Last Updated : 12 Sep 2014 12:02 PM

கடலுக்குள் காற்றாலை அமைக்க தமிழகத்தில் மாதிரி திட்டம்: மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகாரி தகவல்

கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கும் மாதிரி திட்டம் குஜராத் மற்றும் தமிழகத்தில் மேற்கொள்ள உள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க மற்றும் மரபுசாரா எரிசக்தி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, போவிண்ட் என்ற ஐரோப்பிய கூட்டு நிறுவனம் மற்றும் தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்துக்கான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.

மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சக இணைச் செயலர் அலோக் ஸ்ரீவத்சவ், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை சேர்மன் சுதீப் ஜெயின், கடல் காற்றாலைத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஷமிக் பரிக், அர்ஜன் மாஸ்ட், பால் ரெய்னால்ட்ஸ் மற்றும் ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் அலோக் ஸ்ரீவத்சவ் பேசியதாவது:

கடலுக்குள் காற்றாலை அமைப்பது இந்தியாவில் சாத்தியமா என்ற நிலை இருந்தது. ஆனால் அது சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. கடலுக்குள் காற்றாலை அமைப்பது குறித்து மின் உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவி செய்ய முன்வந்துள்ளன. இத்திட்டத்துக்கான மத்திய அரசின் முகமையாக தேசிய காற்றாலை மின் சக்தி மையம் செயல்படும்.

விரைவில் இந்தியாவில் கடலுக்குள் காற்றாலைகள் வைத்து உற்பத்தி செய்யும் மாதிரி திட்டம் தொடங்க உள்ளோம். குஜராத் மற்றும் தமிழகத்தில் இந்த மாதிரித் திட்டம் சுமார் 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மின் சக்தி பொதுத்துறை நிறுவனங்களான பாரத மிகு மின் நிறுவனம், இந்திய மின் தொடரமைப்புக் கழகம், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு முகமை, காற்றாலை மின் சக்தி மத்திய மையம் உள்ளிட்டவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.

மாதிரித் திட்டம் தமிழகத்தில் அமைக்கவும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் சிறிய அளவிலான காற்றாலைப் பண்ணைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் இணைந்து செயல்பட மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைத் தலைவர் சுதீப் ஜெயின் பேசும் போது,’கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால், புதிய திட்டங்கள் குறித்து தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை பரிசீலிக்கும்’ என்றார்.

கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, “தற்போதுதான் இத்திட்டத்துக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்துக்கு மற்ற காற்றாலைகளைவிட அதிக முதலீடு ஆகும் எனத் தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள்தான் வெற்றி பெறும். அரசின் உதவிகளைப் பொறுத்து திட்டத்தின் வெற்றி உள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x