Published : 24 Jun 2016 02:26 PM
Last Updated : 24 Jun 2016 02:26 PM

உதகை அருகே பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள பழங்குடியினர் ஆய்வு மையம், அவர்களின் கலாச்சாரம், வாழ்வியலை பறைசாற்றுவதாக விளங்குகிறது.

தமிழகம் மற்றும் அந்தமான், நிக்கோபார் பழங்குடியினர் வீடுகள், பொருட்கள் உள்ளிட்டவை, அவர்களின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு பிரதிபலிக்கிறது. தமிழகத்திலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நவீன உலகத்துக்கு வந்துவிட்டாலும், சிலர் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்கின்றனர்.

இங்குள்ள பலர் வேட்டையா டுவதை விட்டுவிட்டனர். ஆனால், இவர்களின் மூதாதையர்கள் உணவுக்காக வேட்டையாடினர். வேட்டையாடவும், சமைக்கவும் பயன்படுத்திய பொருட்களை, அவர்களின் வீடுகளில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த எம்.பாலாடா பழங்குடி யினர் ஆராய்ச்சி மையம், பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

வாழ்க்கை பிரதிபலிப்பு

இந்த ஆராய்ச்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகையான பழங்குடியினர்கள், 100 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இசைக் கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல்லாலான அம்பு, வில், கோடாரிகள் உள்ளன. சமையலுக்காக பயன்படுத்திய மண் பாண்டங்கள், கற்களாலான பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளன.

பழங்குடியின பெண்கள் பயன்படுத்திய அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், குடியிருப்புகளுக்காக பயன்படுத்திய பொருட்கள், கலைநயமிக்க விளையாட்டுப் பொருட்கள், போர் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களின் கலை நயமிக்க பாரம்பரிய பொருட்கள் மட்டுமின்றி, அந்தமான் நீக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஒவ்வொரு பழங்குடியின மக்களும் 200 ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்வதற்காக பயன்படுத்திய குடியிருப்புகளின் மாதிரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை காண பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் சுப்ரமணி கூறும்போது, “இந்த ஆய்வு மையம் மூலமாக, பழங்குடியினரின் கலாச்சாரம், வாழ்வியலை அறிய முடியும்” என்றார்.

சுற்றுலா ஆர்வலர் வேணுகோபால் கூறும்போது, ‘உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது.

இங்கு வருவோருக்கு, சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையங்களை அறியச் செய்வதன் மூலமாக, மாவட்டத்தின் வரலாறு மட்டுமின்றி வாழ்வியல் குறித்தும் தெரியவரும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x