

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக் காததால் அதிமுகவினரிடையே கோபம் எழுந்துள்ளது. ‘பொறுமைக் கும் எல்லை உண்டு, அதன்பிறகு செய்ய வேண்டியதை செய்வோம்’ என அக்கட்சியின் பொதுச்செய லாளர் சசிகலா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளி கையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப் பட்டுள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஓபிஎஸ், சசிகலா இருவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித் தனர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனாலும் ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் விரிவான அறிக்கை அனுப்பியதாக நேற்று முன்தினம் செய்தி வெளியானது. ஆனால், அதை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, வனரோஜா, அதிமுக மூத்த தலைவர் சி.பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் நேற்று ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் தாமதப்படுத்தி வரும் நிலையில் எம்.பி., எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சென்று கொண்டிருப்பது சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர் கே.பாண்டியராஜன் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட்டார் என செய்தி வெளியானதும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய சசிகலா, ‘‘ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியும். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அதன்பிறகு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்’’ என எச்சரிக்கை விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு சசிகலா கடிதம் அனுப்பினார். பின்னர், பிற்பகல் 2 மணி அளவில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட் டுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்கு சசிகலா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் எம்எல்ஏக் களுடன் ஆலோசனை நடத்தினார். கே.ஏ.செங்கோட்டையன், எடப் பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆளுநர் மீது திரும்பிய கோபம்
ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்காததால் தமிழக அரசிய லில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 5-ம் தேதி தொடங்கிய பரபரப்பு 8 நாட்களாக சற்றும் குறையாமல் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் காலதாமதம் செய்வதால் சசிகலா ஆதரவாளர்களின் கோபம் ஆளுநர் பக்கம் திரும்பியுள்ளது. நேற்று முன்தினம் வரை சசிகலா ஆதரவாளர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்கவில்லை. ஆளுநர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
ஆனால், நேற்று சசிகலாவே காலதாமதம் ஆவதை குறிப்பிட்டு பொறுமைக்கும் எல்லை உண்டு என எச்சரித்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்ற னர். ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகம் சிரச்சேதம் செய்யப் பட்டு விட்டதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். தமிழகத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவர் சின்னச்சாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
பொறுமைக்கும் எல்லை உண்டு என சசிகலா எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதுபோல மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட் டுள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸூம் சசிகலாவும் சந்தித்துப் பேசி 2 நாட்கள் ஆகியும் ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காததால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை நீடிக்கிறது. மேலும், அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்களை தக்கவைக்க சசிகலா தரப்பினர் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒரு அமைச்சரும் அதிமுக எம்.பி.க் களும் ஓபிஎஸ் பக்கம் சென்றுள் ளனர். மேலும் பலர் ஓபிஎஸ் பக்கம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் திருப்பங்களால் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
கூவத்தூரில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினேன். அவர்கள் அனைவரும் மனநிறைவோடு இருக்கின்றனர். எம்எல்ஏக் களை சந்தித்தது எனக்கும் மனநிறைவைத் தந்துள்ளது. ஒரு குடும்பத்தினரை சந்தித்துவிட்டு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மிகுந்த மன உறுதியுடன் உள்ளனர்.
அதிமுகவை பிளவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பெரும்பான்மை பலம் இருந்தும் ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என நினைக்கிறேன்.
சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். நாளை (இன்று) வேறு விதமாக போராட உள்ளோம்.
இவ்வாறு சசிகலா கூறினார்.
அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘சசிகலாவை முதல்வராக ஆக்குவதுதான் எங்கள் முதல் பணி. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா பக்கம்தான் உள்ளனர்’’ என்றார்.