சென்னையில் வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.45 கோடி பழைய நோட்டுகள் சிக்கின

சென்னையில் வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.45 கோடி பழைய நோட்டுகள் சிக்கின
Updated on
2 min read

மூட்டையாக கட்டிக் கொடுத்த நகைக்கடை அதிபர் தலைமறைவு

கோடம்பாக்கத்தில் வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.45 கோடி பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் நகைக்கடை அதிபர் ஒரு வருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. தலைமறை வாகிவிட்ட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2-வது தெருவில் வசிப்பவர் தண்டபாணி. இவரது வீட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். உதவி ஆணையர் செல்வன் தலைமையில் இந்த சோதனை நடந்தது. வீட்டின் ஒரு அறையில் இருந்த சாக்குமூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தது தெரிந்தது. மொத்தம் 45 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

தண்டபாணி தனது வீட்டின் முன்பகுதியில் ‘ராமலிங்கம் ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். சாதாரண ஜவுளிக்கடை நடத்தி வரும் தண்ட பாணிக்கு 45 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, நகைக்கடை அதிபர் ஒருவர். பழைய ரூபாய் நோட்டு களை மாற்றித் தருமாறு கூறி ரூ.45 கோடியை சாக்கு மூட்டைகளில் கட்டிக் கொடுத்ததாக தண்டபாணி தெரிவித்துள்ளார். தி.நகரைச் சேர்ந்த அந்த நகைக்கடை அதிபரும் தண்டபாணியும் நெருங்கிப் பழகி யுள்ளனர். கடந்த ஆண்டில் பண மதிப்பு நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியானதும், நகைக்கடை அதிபரால் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இந்தத் தகவலை தண்டபாணியிடம் சொன்ன அவர், பணத்தை மாற்றிக் கொடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அடுத்த சில நாட்களில் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் தண்டபாணி வீட்டுக்கு வந்திறங்கின. தண்ட பாணியின் வீட்டுக்கு இதுபோல மூட்டை மூட்டையாக துணிகள் வந்து இறங்குவது வழக்கம் என்ப தால், அந்தப் பகுதி மக்கள் யாருக் கும் சந்தேகம் வரவில்லை.

தண்டபாணியாலும் பணத்தை மாற்ற முடியாததால், வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்தார். பணத்தை என்ன செய்யலாம் என்று நகைக் கடை அதிபரும் தண்டபாணியும் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இந்தத் தகவல் தி.நகர் துணை ஆணையர் சரவண னுக்கு தெரியவரவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தண்டபாணி கொடுத்த தகவலை தொடர்ந்து நகைக்கடை அதிபரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் தேடுவதை அறிந்த நகைக்கடை அதிபர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடித்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரும். பறிமுதல் செய்யப்பட்ட 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தண்டபாணி யார்?

தண்டபாணியின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள், போலீஸார் அணியும் தொப்பிகளை செய்துகொடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இதனால், அந்தக் குடும்பத்தினருக்கு காவல் துறையினருடன் நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளது. ரியல் எஸ்டேட், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, பள்ளிச் சீருடைகள் தைப்பது போன்ற தொழில்களையும் தண்டபாணி செய்து வந்தார். இதனால், அவரிடம் பணம் அதிக அளவில் புழங்கியது. அவரது நட்பு வட்டாரமும் விரிவடைந்தது.

குடும்பத்தினர் அதிர்ச்சி

நகைக்கடை அதிபர் கொடுத்த 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு தண்ட பாணி சரியான சூழ்நிலைக்காக காத்திருந்தார். மொத்த பணத்தை யும் தனது கடைக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தார். இது அவரது குடும்பத்தினருக்குகூட தெரியவில்லை. கடையில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை போலீஸார் எடுத்தபோது, அதைப் பார்த்து குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக பணம் எண்ணும் கருவிகளைக் கொண்டு வந்து கடைக்குள் வைத்து பணத்தை போலீஸார் எண்ணி முடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in