

நாட்டின் பசுமையான அமர்வு என்றழைக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கட்டுமானப் பணிக்காக அடுத்தடுத்து பசுமையான மரங்கள் வெட்டப்படுவதால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை உலகநேரியில் அமைந் துள்ளது சென்னை உயர் நீதிமன்ற கிளை. இங்கு மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. 62 ஏக்கர் பரப்பளவு கொண்ட உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் 22929 சதுர மீட்டர் பரப்பளவில் நிர்வாக கட்டிடமும், 15209 சதுர மீட்டர் பரப்பளவில் நீதிமன்ற கட்டிடமும் உள்ளது. பிற பகுதிகளில் பல வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு, வளாகம் முழுவதும் பசுமையாக காட்சி அளித்தது. இந்தளவு பசுமையான சூழலில் நீதிமன்றம் அமைந்திருப்பது இங்கு மட்டுமே. இதனால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாட்டின் பசுமை அமர்வு என்றழைக்கின்றனர்.
இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயர் நீதிமன்றக் கிளையில் பசுமையான மரங்கள் வெட்டுவது அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிஐஎஸ்எப் சோதனை கட்டிடம் கட்டுவதற்காக ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘மரங்கள் வெட்டப்பட்டது தனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்றும், ஒரு மரம் வளர்வதில் உள்ள கஷ்டத்தை உணராமல் மேம்பாடு என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுவதாக வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அருகே பிரம்மாண்டமாய் வளர்ந்திருந்த பல மரங்கள் தற்போது வெட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் ரூ.22.95 லட்சம் செலவில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகம் கட்டப்படுவதாகவும், கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் உள்ள மரங்கள் பதிவாளரின் அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசுமையான மரங்களை வெட்டுவதற்கு பதிவுத் துறையே அனுமதி வழங்கியது வழக்கறிஞர் களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வீடுகளில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என மக்கள் நினைத்து அதை நிறைவேற்றி வருகின்றனர். அதுபோன்று ஏன் உயர் நீதிமன்ற கிளை போன்ற அமைப்புகள் செயல்படாதது வருத்தம் தருகிறது. மரங்கள் வெட்டப்படாமல் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ள போது 13 ஆண்டுகளாக வளாகத்தில் நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தது சரியல்ல என்றார்.