Published : 13 May 2017 09:15 PM
Last Updated : 13 May 2017 09:15 PM

திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது

திருமங்கலம் - நேரு பூங்கா இடையே 7.4 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

திருமங்கலம் - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், கடந்த மாதம் இந்த வழித்தடத்தில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியாக இருந்ததால், சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல் அளித்தார். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முறையாக தகவல் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்குகிறது. இதற்கான விழா, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பங்கேற்று, மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

மேலும், 7.4 கி.மீ. தொலைவுள்ள சுரங்க வழித் தடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 சுரங்க ரயில் நிலையங்களையும் அவர்கள் திறந்து வைக்கின்றனர்.

ஏற்கெனவே, உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x