

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்றிலேயே ஒரு லட்சியத்துக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு நடத்திய அறவழி அமைதிப் போராட்டம், இதுபோல் இதுவரை நடந்தது இல்லை என்று உச்சிமீது மெச்சத்தகும் விதத்தில் மாணவர்களின் மெரினா புரட்சி தமிழர்களின் ஜல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாக்க நடைபெற்று, வெற்றியும் ஈட்டியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளும், தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு உரிமையை மதித்து மாநில அரசோடு இணைந்து செயல்பட்டு, சட்ட ரீதியாக தடை நீங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த இந்தியப் பிரதமர் மோடிக்கும் தமிழர்களின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.
சின்னஞ்சிறு, குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் அறப்போர் களத்துக்கு அழைத்து வந்த பெற்றோர்களுக்கும், தமிழர் பண்பாட்டையும், ஜல்லிக்கட்டின் பெருமையையும், அதற்கு தடைகள் ஏற்பட்ட அநீதியையும் கல்லூரி மாணவ - மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவ -மாணவிகளும் ஆணித்தரமாக எடுத்து வைத்த வாதங்களை தொலைக்காட்சிகளில் கண்டு திகைத்து மெய்சிலிர்த்துப்போனேன்.
தமிழர் நாகரிகம், உரிமைகள் குறித்த உணர்வுகள் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக ஏங்கித் தவித்தேன். அது இன்றைய மாணவர் சமூகத்தில் வளர்ந்திருப்பதை எண்ணி என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. ஆனால், ஆறு நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களை எண்ணி வேதனைப்படுகிறேன்.
அரசின் அறிவிப்பை ஏற்கமாட்டோம். ஜல்லிக்கட்டு தடை நீங்கியது என்ற அரசின் அறிவிப்பை கடந்த காலத்தைக் கருதி ஏற்க இயலாது. சரியான உத்தரவாதம் கிடைக்கும்வரை எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறுவதற்கும், போராடுவதற்கும் ஜனநாயகத்தில் மாணவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி பலாத்காரத்தைப் பிரயோகிப்பது, வலுக்கட்டாயமாக காவலர்கள் தூக்கிச் சென்றது நியாயமல்ல.
இந்த அறப்போராட்டத்தின் குறிக்கோளையே சிதைக்கும் வகையில், அதன் பெருமைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பிரதமரையும், முதல்வரையும் எழுத்தில் பதிக்க முடியாத அருவருப்பான வார்த்தைகளால் வசைபாடியோரையும், அறப்போர்க் களத்துக்குள் ஊடுருவி வன்முறைக்கு தூபம் இட்டவர்களையும், அவர்களின் பின்னணியிலிருந்து ஏவிவிட்டவர்களையும் தக்க புலன் விசாரணையின் மூலம் கண்டறிந்து, சாட்சியங்களோடு நிலைநாட்டி, அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையின் பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. சில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும். ஆனால், அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் காவல்துறையினரே வாகனங்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி வாட்ஸ்அப்பில் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அந்தக் காவலர்கள் மீதும், தவறு செய்யாத மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீதும் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஆறு நாட்களும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் உற்ற நண்பர்களாகவே செயல்பட்டனர் என்பதும், கைகளில் துப்பாக்கியும், லத்திக் கம்பும் இல்லாமல் பல இடங்களில் போராட்டக்காரர்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டியதும் பாராட்டுக்குரியவை ஆகும். ஆனால், வெண்மைத் திரையில் கரும்புள்ளி என ஒன்றிரண்டு சம்பவங்கள் காவல்துறையினரின் நன்மதிப்புக்கு பங்கம் விளைத்தது.
உதாரணத்திற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் மத்தியில் இருந்த தமிழக சுற்றுச் சூழல் வாழ்வுரிமைப் போராளி முகிலனை பகல் ஒரு மணிக்கு காவல்துறையினர் கைது செய்து, இரவு எட்டு மணி வரை அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்று எவரும் அறிய முடியாதவாறு காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று, அலங்காநல்லூர் நடைபாலம் அருகில் 30 காவலர்களை சுற்றி நிறுத்தி வைத்துக்கொண்டு, அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முகிலனை கடுமையாக தடிகொண்டு தாக்கியுள்ளார்.
காவல்துறையினர் மிகக் கடுமையாக அடித்ததில் கால்களிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், வாடிப்பட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
முகிலன் அணுஉலையை எதிர்த்து இரண்டு ஆண்டுகள் இடிந்தகரையில் அமைதிவழி அறப்போராட்டத்தை நடத்தியவர். ஆற்றுப் படுகைகளில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க இடைவிடாது அறவழியில் போராடுபவர். எனது தலைமையிலான நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராவார்.
முகிலன் போன்ற அறவழிப் போராளிகளை ஒடுக்கிவிடலாம், அடித்து நொறுக்கினாலும் கேட்பதற்கு நாதி இருக்காது என்று காவல்துறை மனப்பால் குடிக்க வேண்டாம். முகிலனைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளரையும், காவலர்களையும்பணியிடை நீக்கம் செய்து, மீது வழக்கு பதிய வேண்டும்.
நடந்து முடிந்த அறப்போரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் இயக்கியவர்கள் அனைவர் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.