

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்தார். அத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. பின்னர் நடந்த அலுவல் ஆய்வுக் குழுவில் செப்டம்பர் 2-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3 நாள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. பேரவை கூடியதும் முதல் நிகழ்ச்சியாக மறைந்த பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. 28-ம் தேதி வரை விவாதம் நடக்கிறது. விவாதத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 29-ம்தேதி பதிலளித்து பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும். பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இடையே, முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.