

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். பல்வேறு குறைகள் தொடர்பாக ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்து ஆட்சியரி டம் மனுக்களை அளித்தனர்.
மதியம் 12 மணியளவில் மனு அளிக்க வந்த நபர் ஒருவர், திடீரென தனது காலணியை எடுத்து ஆட்சியரைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த மற்ற அலுவலர்கள் அவரை பாய்ந்து பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர் வீசிய காலணி மற்ற அலுவலர்கள் மீது விழுந்துள்ளது. இதனிடையே அங்கிருந்தவர்கள் அந்நபரை சுற்றி வளைத்துப் பிடித்து தாக்கியுள்ளனர்.
காவல் துறையினர் அந்நபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ராசிபுரம் அருகே கட்டநாச்சம்பட்டியைச் சேர்ந்த ஜி.ஆறுமுகம்(55) எனவும், சித்த மருத்துவர் என்பதும் தெரியவந் தது.
தொழில் தொடங்க கடனுதவி கேட்டு பலமுறை மனு அளித் துள்ளார். எனினும், மனு ஏற்கப்படாததால் ஆத்திரத்தில், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.