

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களுக்கு இடையில் ஓடும் கொசஸ்தலையாற்றின் கிளை ஆறான குசா ஆற்றின் குறுக்கில், சித்தூர் மாவட்டம், கார்வெட் நகர் மண்டல், நெலவயல் கிராமத்தில் ஆந்திர நீர்ப் பாசனத்துறையினர் தடுப்பணை கட் டும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த முக்கியமான பிரச்சினையை தங் கள் உடனடி கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஆந்திர அதிகாரிகளின் பாரபட்சமான இந்த நடவடிக்கை தமி ழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொசஸ்தலையாற்றின் கிளை ஆறான குசா ஆற்றின் மூலம், தமிழகத்தின் வெளிகாரம் ஏரி வாயிலாக 354.32 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு வரும் நீரில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.
குசா ஆற்றில் எந்த புதிய பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும், கீழ் நிலை மாநிலமான தமிழகத்திடம் முன் அனுமதியும், ஆலோசனையும் ஆந்திர அரசு பெற வேண்டும். தற் போது ஆந்திர அதிகாரிகளின் நட வடிக்கையானது, ஆற்றின் இயற்கை யான பாயும் தன்மையை பாதிப்ப துடன், வெளிகாரம் ஏரிக்கு நீர் வரும் அளவையும் பாதிப்பதாக உள்ளது.
இந்த சூழலில், நெலவயல் பகுதி யில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் பாரபட்சம் மிக்க இந்த நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க் கிறது. எனவே, தாங்கள் இந்த விஷயத் தில் நேரடியாக தலையிட்டு, நெல வயல் கிராமத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணியை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். மேலும், கொசஸ்தலை யாற்றின் துணை ஆறுகள், கிளையாறு களில் தமிழகத்தின் முன் அனுமதி பெறாமல் செய்ய இருக்கும் பணிகள், நடந்து கொண்டிருக்கும் பணிகளை யும் நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இந்த விஷயத்தில் தங்களது உடனடியான நேர்மறை நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.