

இன்று உலக சுற்றுலா தினம்
உலகின் எந்த நாட்டையும்விட ஆழமான வரலாற்றுப் பின்னணியும் அகலமான புவியியல் பரப்பையும் கொண்ட நாடு இந்தியா. ஆனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐம்பது இடத்தில்கூட இந்தியா இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை. இதைப் பொய்யாக்க வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி ‘சுத்தமான இந்தியா’ என்னும் இயக்கத்தை காந்தி பிறந்த நாளில் தொடங்க இருக்கிறார்.
இன்று (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினத்தையொட்டி, இந்தியா வின் சுற்றுலா வளர்ச்சிக்கு சவாலாக இருப்பவை எவை? எதில் கவனம் செலுத்தினால் சுற்றுலா வளரும் என நம்மிடையே பகிர்ந்து கொண்டார், `சதர்ன் ரீஜியன் டிராவல் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’வின் தலைவர் வீ.கே.டி.பாலன்.
வரலாறும் புவியியலும் சேர்ந்ததுதான் சுற்றுலா
தமிழ்நாட்டில் கண்டறியப்படாத சுற்றுலாத்தலங்கள் நிறைய உள்ளன. வரலாறும் புவியியலும் சேர்ந்ததுதான் சுற்றுலா. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வரலாற்றுப் பெருமைவாய்ந்த இடங்கள் நிறைந்துள்ளன.
சவால்கள்
சுற்றுலாவின் அடிப்படை நோக்கமே மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்தான். இவை இரண்டுமே இந்திய சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கின்றன. குப்பைகள் இல்லாத இந்தியா மிகவும் அவசியம். சட்டத்தை கடுமையாக அமல் செய்வதன்மூலம் 50 சதவீதம் குப்பைகளைத் தவிர்க்கலாம். 50 சதவீதம் விழிப்புணர்ச்சியை மக்களிடம் தொடர்ந்து உண்டாக்குவதின் மூலம் குப்பையில்லா இந்தியாவை உருவாக்கமுடியும்.
ஏறக்குறைய 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு கடற்கரையைக் கொண்டது இந்தியா. ஆனால் அவை பெரும்பாலும் திறந்தவெளி கழிப்பிடங்களாகவே இருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும். கடற்கரையை ஒட்டிய சுற்றுலா திட்டங்களை கட்டமைக்க வேண்டும்.
கடற்கரையை கட்டமைப்பதில் மீனவர்களுக்கு நான்கில் ஒருபங்கு உரிமை உண்டு. கடற்கரையை அசுத்தப்படுத்தாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத திட்டங் களை அவர்களுடன் சேர்ந்து திட்டமிட வேண்டும். பெரிய, சிறிய துறைமுகங் களின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும்.
கடற்கரையை ஒட்டிய தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும். இதில் அரசு மட்டும் தனியாக செயல்பட்டுவிட முடியாது. தனியார்களின் ஆதரவும் தேவை. இந்த திட்டங்களைச் செயல்படுத்த உள்நாட்டில் மட்டும் அல்ல பல வெளிநாடுகளும் தங்களின் மூலதனங்களைச் செலுத்து வதற்குத் தயாராக இருக்கின்றன. இதன்மூலம் அளவிடமுடியாத வேலைவாய்ப்பும் அந்நிய செலாவணியும் கிடைக்கும்.
பிரச்சினைகள் என்னென்ன?
அரசுக்கும் தனியாருக்கும் இடையே நடக்கும் வர்த்தகப் போட்டி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு எதிராக அமைகின்றது. குறிப்பாக, சுற்றுலாத் துறை ஹோட்டல், ரெஸ்ட்டாரென்ட், பேக்கேஜ் டூர் டூரிஸ்ட் வாகன ஏற்பாடு போன்ற வர்த்தக ரீதியான சேவைகளை செய்துவருகிறார்கள். இந்த சேவைகளில் சுற்றுலாத் துறைக்கு அரசு உதவியும் கிடைக்கிறது. நஷ்டமும் ஏற்படுகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஒரு டூரிஸ்ட் பஸ்சை இயக்க ஆண்டுக்கு தோராயமாக ரூ.72 ஆயிரம் அரசுக்கு செலுத்தினால் போதுமானது. அதே பஸ்சை தனியார் இயக்க அரசுக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இதனால் தமிழ்நாட்டில் சுற்றுலா பர்மிட்டுடன் கூடிய டூரிஸ்ட் பஸ் ஒன்றுகூட இல்லை என்பது வேதனை யான விஷயம். இத்தனைக்கும் தமிழ்நாட்டில் டூரிஸ்ட் பஸ்களுக்கான தேவை ஏறக்குறைய 2 ஆயிரத்தைத் தாண்டும்.
வளர்ச்சி பெற்ற நாடுகளில் அரசு, சுற்றுலா சேவைத் துறையில் ஈடுபடுவதில்லை. கட்டமைப்புகளை உருவாக்குதல், விளம்பரங்களின் மூலமாக சுற்றுலா தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், உரிமை வழங்குதல், லாபகரமாக அந்தத் துறையை இயங்கச் செய்து அரசு கஜானாவுக்கு வரிப் பணத்தை கொண்டுவரச் செய்வது. இதைத்தான் அந்த நாடுகள் செய்கின்றன.
அரசு, ஹோட்டல் நடத்துவதும் சுற்றுலா திட்டங்களை தாமே செயல்படுத்துவதும் தேவை இல்லா தது. சுற்றுலா திட்டங்களை தனியார் செய்யும் விதத்தில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா அபரிமிதமான வளர்ச்சி அடையும். அரசின் வேலை திட்டமிடுவது, உரிமம் வழங்குவது, வரி வசூலிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவைதான்.
மறைந்துவிட்ட கப்பல் தடங்கள்
உலக அளவில் கப்பல் சுற்றுலாப் பயணங்கள் பெருகிவருகின்றன. இதற்கு நேர்மாறாக இந்தியாவில் அருகி வருகின்றன.
இந்தியாவில் கப்பல் பயணத் துக்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய இடத்தில் தமிழகம் இருக்கிறது. அதாவது, நான்கு வழித்தடங்களில் முன்பிருந்த கப்பல் பயண வாய்ப்புகளை மீண்டும் அரசு புதுப்பிக்க வேண்டும்.
சென்னை கோலாலம்பூர் சிங்கப்பூர் (20 ஆண்டுகளுக்கு முன்புவரை கப்பல் சென்ற தடம்)
தூத்துக்குடி கொழும்பு (5 ஆண்டுகளுக்கு முன்வரை கப்பல் சென்ற தடம்)
ராமேசுவரம் தலைமன்னார் ராமேசுவரம் (கடந்த 86-ஆம் ஆண்டுவரை கப்பல் சென்ற தடம்)
சென்னை அந்தமான் சென்னை (தற்போது குரூஸ் அந்தஸ்து இல்லாத கப்பல்கள் இயக்கப்படு கின்றன) இந்த நான்கு வழித் தடங்களிலும் எண்ணற்ற பயணிகள் பயணித்துவந்தனர்.
இன்றைய தேவையில் `குரூஸ்’ எனப்படும் உல்லாசக் கப்பல்களை பயன்படுத்தவேண்டும். அதற்கான துறைமுக வசதிகளை கட்டமைக்க வேண்டும்.
உரிமம் வழங்குவதிலும் அரசு வேகம் காட்டவேண்டும். உலக அளவில் இருக்கக்கூடிய கப்பல் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முன்வரும். இந்திய அரசின் ஷிப்பிங் கார்ப்பரேஷன் சார்பாகவும் இம்மாதிரி கப்பல்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் சுற்றுலாத் துறையின் வருமானம் அதிகரிக்கும்.
அயல் நாடுகளில் தேசத் தலைவர் களின் உருவங்களைப் பொறித்து மலைகளையே ஆவணங்களாக்கு கிறார்கள். இதைச் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை, குவாரிகளுக்கு தாரை வார்க்காமல் இருக்கலாமே?!” என்றார் ஆதங்கத்துடன் வீ.கே.டி.பாலன்.