

மதுரை அருகே குவாரியில் மண் சரிந்து 3 பேர் பலியானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆபத்தான குவாரிகளின் உரிமத்தை உடனே ரத்து செய்யுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியில் கல் குவாரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி முத்துராமலிங்கம், செந்தில், நல்லையன் ஆகிய 3 பேர் இறந்தனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த குவாரியை மதுரை கோட்டாட்சியர் செந்தில் குமாரி, தொழிலாளர் நல அலு வலர் சாந்தி உட்பட பலர் நேற்று ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகளிடம் இறந்தவர்களின் கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் கூறியது: விபத்தில் இறந்த தெத்தூர் மேட்டுப்பட்டி செந்தில் மனைவி சித்ராவுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நடுப்பட்டியைச் சேர்ந்த நல்லையனுக்கு மனைவி மகாதேவி, 2 குழந்தைகள் உள்ளனர். தாதக்கவுண்டம்பட்டி முத்துராமலிங்கத்துக்கு மனைவி விஜயா, 2 குழந்தைகள் உள்ளதால் குடும்பத்தினர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உடனே நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், இறந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
விபத்து நடந்த குவாரியில் மண் குவியல்களுக்கு இடையேதான் கடின பாறைகள் உள்ளன. இதனால் துளை போட்டபோதே மண் சரிந்து விழுந்தது. இதுபோன்ற பாறைகள் உள்ள குவாரியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது தமிழகத்தில் இதுவே முதல் முறை என தகவல் கிடைத்துள்ளது. கடினமான பாறையாக மட்டும் இருந்திருந்தால் சரிந்து விழ வாய்ப்பே இல்லை.
குவாரியை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டத்தில் ஆபத்தான குவாரிகளை ஆய்வு செய்யவும், ஆபத்தான குவாரிகளின் உரிமம் முடிய அவகாசம் இருந்தாலும் உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும் விபத்து நடந்த குவாரிக்கு உரிமம் வழங்கியதில் முறையாக செயல்படாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என் றனர். நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வு நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.
குத்தகைதாரர் உட்பட 2 பேர் கைது
சம்பவம் குறித்து மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, சமயநல்லூர் டிஎஸ்பி வேல் முருகன் தலைமை யிலான போலீஸார் விசாரித்தனர். 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் கல்குவாரியின் உரிமையாளர் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சேகர், மேலாளர் பூவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.