Published : 20 Sep 2014 11:34 AM
Last Updated : 20 Sep 2014 11:34 AM

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவுக்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: "ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கள் வலியுறுத்தி வருகின்றன. 6 மாதங்களுக்கும் மேலாக இந்தக் கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வரும் போதிலும் தமிழக அரசு தொடர்ந்து அமைதியை கடைபிடித்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசக்கூட தமிழக அரசு முன்வரவில்லை.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் தேவையில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே ஆவின் நிறுவனம் வழங்குகிறது. எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒப்பீட்டளவில் ஆவின் நிறுவனம் தான் அதிக அளவு பாலை விற்பனை செய்கிறது என்பதால் வெளிச்சந்தையில் பால் விலையை கட்டுப்படுத்தும் சக்தியாக திகழ்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது தான் என கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 11,503 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 23 ரூபாயும், எருமைப் பாலுக்கு 31 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டு வருகிறது. இதை முறையே ரூ.30, ரூ.40 ஆக உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தை விட லிட்டருக்கு ரூ.7 வரை கூடுதலாக விலை தருகின்றன. எனவே, ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வந்த பலரும் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். இதனால் 2012&13 ஆண்டில் நாள்தோறும் 24.36 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடந்த ஆண்டில் 23.22 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. வறட்சி காரணமாகத் தான் பால் கொள்முதல் குறைந்ததாக அரசு கூறிவரும் போதிலும், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறியது தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

பால் உற்பத்திக்கான செலவு கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது தான். கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் பாலுக்கான கொள்முதல் விலையை மட்டும் உயர்த்த தமிழக அரசு மறுப்பது நியாயமானதாக தோன்றவில்லை. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாலுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்குவதுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது. தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்கப்படா விட்டால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மேலும் குறைவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைந்தால், வெளிச்சந்தையில் அதன் வினியோகமும் குறையும். இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை விருப்பம்போல உயர்த்தி விற்க வாய்ப்பிருக்கிறது. இது ஆவின் நிறுவனத்தை மட்டுமின்றி, தரமான பாலை நியாயமான விலையில் வாங்கி வரும் பொது மக்களையும் மிகக்கடுமையாக பாதிக்கும் என்பது உறுதி.

எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்த ஆயத்தமாகி வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவுக்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x