

திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட அக்கட்சியின் மகளி ரணி நிர்வாகி சிம்லா முத்துச்சோழன் விருப்ப மனு அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 10 முதல் 12-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று காலை 10 மணிக்கு திமுக தலைமை அலுவ லகமான அண்ணா அறிவால யத்தில் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது.
திமுக மகளிர் அணி நிர்வாகி சிம்லா முத்துச்சோழன் விருப்ப மனு அளித்தார். முதல் நாளான நேற்று அவரைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்க வில்லை.
ஆனால், 10 பேர் ரூ. 1,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றுள்ளதாக திமுக அலுவலக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகள் அதாவது 33.14 சதவீத வாக்குகளைப் பெற்றார். திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகளான அவர் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவுடன் ரூ. 25 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். நாளை மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம். விருப்ப மனு அளித்தவர்களிடம் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.