

உள்ளாட்சித் தேர்தலுக்கு 2011 மக் கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்வது முடியாத காரியம் என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து நடத்தவும், 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக, பாமக கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது தமி ழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், அக்டோபரில் தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 99,335 கிராம பஞ்சாயத்து வார்டுகள், 6,471 பஞ்சாயத்து யூனி யன் வார்டுகள், 655 மாவட்ட பஞ் சாயத்து வார்டுகளில் எல்லை மறு வரையறை என்பது மிகப்பெரிய பணியாகும். இந்தப் பணிகளை மேற் கொள்ள 2011 மக்கள்தொகை விவ ரங்களை வழங்க மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநருக்கு கடந்த 2013 செப்டம்பர் 5-ம் தேதி கோரிக்கை விடுத்தோம். ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் கடந்த 2014-ல்தான் எங்களுக்கு வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 459 வார்டு களையும் குறுகிய காலத்தில் மறுவரையறை செய்வது இயலாத காரியம். ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கான இட ஒதுக் கீட்டை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சி யர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும். ஆனால், வார்டு மறுவரையறை பணிகளை அக்டோபர் மாதத்துக்கு முன்பாக முடிக்க முடியாது. எனவே, தற்போது நடைமுறையில் உள்ள வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 39 நாடாளுமன்ற, 234 சட்டப்பேரவைத் தொகுதி மறு வரையறைக்கு 3 முதல் 4 ஆண்டுகள் அவகாசம் தேவைப்பட்டது. உள்ளாட்சிகளில் 3 மாதத்தில் இப்பணியை செய்ய முடியாது. எல்லை மறுவரையறை குறித்து பொதுமக்கள் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது. ஆகவே, தற்போது நடைமுறையில் உள்ள வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தொகுதி மறுவரையறை, சுழற்சி முறையில் வார்டுகளை இட ஒதுக் கீடு செய்வது போன்றவை குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதி லளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.