

தமிழக அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்கும் முறையில் நடவடிக்கைகள் எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்ச் 31 அன்று சென்னையில் தொடங்க இருந்த விவசாயிகள் மாநாட்டை நடத்தவிடாமல் சென்னை மாநகர காவல்துறை தடுத்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
இந்த மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவசாயம் சார்ந்த நிபுணர்கள், நீர்நிர்வாக நிபுணர்கள் பங்கேற்க இருந்தனர் என மாநாட்டு அமைப்பாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே மாநாடு நடைபெறவிருந்த இடத்தில் மாநாட்டை நடத்த விடாமல் காவல்துறை தடுத்ததையடுத்து, மாநாட்டை வேறு இடத்தில் நடத்தவும் காவல்துறையினர் விடவில்லை என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டு காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்டது போன்று, விவசாயிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக மக்களும் திரண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சென்னை மாநகர காவல்துறை ஆட்டிப் படைக்கிறது. எனவே தான், கடும் கோடையின் தாக்கத்திலிருந்து விடுபட மாலையில் மெரினா கடற்கரைக்கு வருவோரும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
அமைதியான முறையில் கூட்டம் கூடும் உரிமை, கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்லும் உரிமை, கருத்துகளை வெளியிடும் உரிமை, அரசியல் சாசனத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் வர்தா புயல் பாதிப்பு, வரலாறு காணாத வறட்சியின் பாதிப்பு ஆகியவற்றால் துன்பத்தில் உழலும் மக்களைக் காத்திட, மத்திய பாஜக அரசை வலியுறுத்தி உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தராத தமிழக அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்கும் முறையில் நடவடிக்கைகள் எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.