

தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்பில், அதிமுகவில் குறிப்பிட்ட 30 எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற குழப்பம் மேலோங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்துடன்தான் முதல்வரா கப் போவதாக சசிகலா அறிவித்துள்ளார். சட்டப்பேரவை யில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் 5 பேர் மட்டுமே இணைந் துள்ளனர். மற்றவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சசிகலா கூறிவந்தாலும், அந்த தரப்பில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் தற்போது 135 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளிக்கும் 5 பேர் என 6 பேர் தனி அணியாக உள்ளனர். மற்றவர்களில் பேரவைத் தலைவர் தவிர 128 பேர் தற்போது சசிகலா அணியில் உள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் 135 பேரில் 30 பேர் தலித்கள். இவர்களில் ஒருவர் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வந்துவிட்டார். மற்ற 29 பேரும் யாரை ஆதரிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தலித் எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து வருவதாக கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ஆனால், அந்த எம்எல்ஏக்கள் இரட்டை மனநிலையில் இருப்பதாகவும், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்து ஆதரவு நிலையை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.