பெருந்துறையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: அரசு மீது தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அடிப்படை தொண்டனாக இருந்த என்னை படிப்படியாக மாவட்ட செயலாளர் நிலைக்கு உயர்த்தினார். கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டேன். நான் பெருந்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கருதி முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு இந்த பதவியை வழங்கினார்.
பெருந்துறை தொகுதி வளர்ச்சிக்காக ரூ.500 கோடி மதிப்பில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 2014-ம் ஆண்டு 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்திருந்தால் இத்திட்டம் நிறைவேறி இருக்கும். ஆனால் இதுவரை நிறைவேறவில்லை. கூவத்தூரில் தங்கி இருந்தபோது சசிகலா முதல்வராக வேண்டும் என அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் முடிவு செய்தோம்.
அவர் சிறை சென்ற காரணத்தினால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொண்டு அவருடன் சேர அழைத்தார். ஓபிஎஸ் அணியில் வெறும் 12 உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். நான் ஒருவன் சேர்ந்திருந்தால் 13 ஆகத்தான் உயர்ந்திருக்கும். அவரால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
கூவத்தூரில் இருந்தபோது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் என்னை அழைத்துச் சென்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, பதவியேற்பு விழா முடிந்த பிறகு எனக்கு மாவட்ட செயலாளர் பதவி தருவதாக கூறினார். அதற்கு நான் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளேன். எனக்கு இதுவெல்லாம் தேவையில்லை.
எனது தொகுதி வளர்ச்சிக்கு 3 திட்டங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நான்கு வழி புறவழிச்சாலையில் மேம்பாலம் வேண்டுமென தெரிவித்தேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி சரி என்றார். இப்போது ஆட்சி அஸ்திவாரமாக இருப்பதற்கு ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் காரணம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு வந்து ரூ.720 கோடியில் திட்டங்களை அறிவித்தார். திட்ட அறிக்கையில் பெருந்துறை தொகுதிக்கு ஒரு திட்டங்கள் கூட இல்லை. அவர் சம்மதம் தெரிவித்த கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டமும் இல்லை. இவை இருந்திருந்தால் நான் முதல் ஆளாக விழாவில் கலந்திருப்பேன். பெருந்துறை தொகுதியை புறக்கணித்ததால் நான் மிகுந்த மனவேதனையுடன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. என்னால் இந்த ஆட்சிக்கு எந்த நெருக்கடியோ, இடையூறோ வராது.
முதல்வரிடம் நான் தக்க மரியாதை வைத்துள்ளேன். தடங்கல் எங்குள்ளது? என எனக்கு தெரியவில்லை. முதல்வர் எனது கோரிக்கையை நிறைவேற்ற தயாராக இருந்தாலும் இதை தடுப்பது யார்? என்று தெரியவில்லை. ஈரோடு மாவட்டத்தில உள்ள அமைச்சர்கள் எல்லா தொகுதிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் நான் கேட்ட 3 திட்டங்களை நிறைவேற்றினால்தான் பெருந்துறை தொகுதி மக்கள் ஆட்சியை ஏற்றுக் கொள்வர். இதனை நிறைவேற்றாவிட்டால் தேர்தலின்போது பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முதல்வர் ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் அவர் அறிவித்த திட்டங்களை இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் என 3 அணிகளாக அதிமுக பிரிந்துள்ள சூழலில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அரசின் குறைகளை சுட்டிக்காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
