தருமபுரி அருகே நள்ளிரவில் கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி; 8 பேர் காயம்

தருமபுரி அருகே நள்ளிரவில் கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி; 8 பேர் காயம்
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த எண்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் சாக்கோ(42). இவர் உட்பட 5 பேர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சேஷம்பட்டி அருகே நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் மோதி, எதிர் மார்க்க சாலைக்குள் பாய்ந்தது.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த குழுவினர் பழனி, மருதமலை கோயில்களுக்குச் சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில், கேரளா நோக்கி சென்ற காரை இயக்கிய தாமஸ் சாக்கோ(42), கிருஷ்ணகிரி நோக்கி சென்ற வாடகைக் காரை இயக்கிய ஓட்டுநர் மாதப்பன்(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டயத்தைச் சேர்ந்த ஜான்சன் மேத்யூ(22), வலசம்மா(70) ஆகியோர் உயிரிழந்தனர்.

பலியான தாமஸ் சாக்கோவின் மகள் அன்னா செலின்(8) உட்பட 8 பேர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in