Published : 15 Sep 2016 08:33 AM
Last Updated : 15 Sep 2016 08:33 AM

பைக் மீது பஸ் மோதி மாணவர் பலி: ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் மகேஷ்(17). வீட்டருகே உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று பிற்பகலில் மகேஷ், அருகே வசிக்கும் அவரது நண்பர் பாலகிருஷ்ணன் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராயப்பேட்டை மீர்சாகிப் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

அப்போது பாரிமுனையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற 21ஜி மாநகர பஸ் மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக மோதியது. நிலை தடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் மகேஷ் மீது பஸ்ஸின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலையின் ஓரத்தில் விழுந்த பாலகிருஷ்ணன் காயங்களுடன் தப்பினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அடையாறு போக்குவரத்துப் பிரிவு போலீஸார் மகேஷின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து அறிந்த மகேஷின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் சங்கர் விரைந்து வந்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் கண்ணாடிகளை உறவினர்கள் அடித்து உடைத்தனர். பஸ் ஓட்டுநர் துரைசாமியை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x