

பண மோசடி வழக்கில் கைது செய் யப்பட்ட எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு ஐஜேகே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதன் தலைமறைவு
எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, வேந்தர் மூவீஸ் நிர்வாகி மதன் பலரிடம் பணம் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்கள் குவிந்தன. வாங்கிய பணம் முழுவதையும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலை மறைவானார். அவர் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இதற்கிடையில், பண மோசடி தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிர்வாகிகள் 3 பேர் மற்றும் மதனின் நண்பர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். மோசடி வழக்கில் சேர்க்கப்பட்ட ஐஜேகே நிறுவனத் தலைவரும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தருமான பச்சமுத்துவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்தனர். செப்டம்பர் 9-ம் தேதி வரை பச்சமுத்துவை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு சைதாப்பேட்டை 11-வது நீதி மன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் பச்சமுத்து அடைக்கப்பட்டார்.
75 கோடி முன்தொகை
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் மாலை விசாரித்து, பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ‘உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, பச்சமுத்து ரூ.75 கோடியை முன்தொகையாக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தலா ரூ.10 லட்சத்துக்கு இரு நபர் பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
தொண்டர்கள் உற்சாகம்
இதைத் தொடர்ந்து, சைதாப் பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பச்சமுத்து தரப்பில் நேற்று பிற்பகல் ரூ.75 கோடி செலுத்தப்பட்டது. ரூ.10 லட்சத்துக்கு 2 நபர் உத்தரவாதமும் வழங்கப்பட்டது. நீதிமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, பச்சமுத்து நேற்று மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு ஐஜேகே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.