ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: முதல்வராகும் திட்டமில்லை என பேட்டி

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: முதல்வராகும் திட்டமில்லை என பேட்டி
Updated on
2 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெய லலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் என்று அதிமுக வேட் பாளர் டிடிவி தினகரன் தெரிவித் துள்ளார்.

அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில், அக்கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப் பட்டார். அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதை பெருமையாக கருதுகிறேன். ஜெய லலிதா நிறைவேற்ற நினைத்த திட்டங்களை, விட்டுச் சென்ற பணி களை ஆர்.கே.நகர் தொகுதி மக்க ளுக்கு தொடர்ந்து நிறைவேற்று வேன்.

அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளது. உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

அதிமுகவின் வேட்பாளராக நிச்சயம் வெற்றி பெறுவேன். பொது மக்கள், அதிமுக தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எம்ஜிஆர் 1972-ல் அதிமுகவை தொடங்கியது முதல் திமுக எதிர்ப்புடன்தான் செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு எதிர்க்கட்சி திமுகதான். வேறு ஒரு நபரையோ, எந்த ஒரு குழுவையோ நிச்சயம் எங்களுக்கு எதிரான வேட்பாளராக கருதவில்லை.

வேட்புமனு தாக்கல் எப்போது?

மார்ச் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வேன்.

இரட்டை இலை சின்னத்தை பெறும் நோக்கில் தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் சந்தித்துள்ளாரே?

அதிமுக வேட்பாளராகிய நான் இரட்டை இலை சின்னத்தில்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடுவேன். வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும்.

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் முடக்க வாய்ப்புள்ளதா?

ஆர்.கே.நகர் தேர்தலுக்குப்பின் அவரே முடங்கிப்போய் விடுவார். சில ஏம்எல்ஏக்களும் எம்.பி.க்களும் அமைச்சர்களாக ஆகிவிடலாம் என்ற வாக்குறுதிகளை நம்பி வழி தவறி போய்விட்டனர். தன்னுடன் வந்தவர்களை தக்கவைக்க ஒரு வாரத்துக்கு இதுபோன்ற நாடகங் களை பன்னீர்செல்வம் நடத்துவார். அவர் ஒரு சிறந்த நடிகர் திலகம்.

நீங்கள் வெற்றி பெற்ற பின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பீர்களா?

நிச்சயம் இல்லை.

கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டதே?

அந்த காலக்கட்டத்தில் இருந்த முதல்வரின் நடவடிக்கையால் மூத்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒருவரிடத்தில் இருந்தால் நியாயமாக இருக்கும் என்றார்கள். எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.

சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்ற திமுக கோரிக்கை விடுத்துள்ளதே?

துரைமுருகன் அல்லது சேகர் பாபுவை கமிஷனராக போட்டால் தான் திமுகவினர் ஏற்பார்கள்.

மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறீர்களா?

மக்கள் நலக்கூட்டணி மட்டு மல்ல, வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ், பாஜகவும் எங்களுடன் வரவேண் டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை ஒரே எதிரி திமுக மட்டும்தான். பிற கட்சி களின் ஆதரவை ஏற்றுக் கொள் வோம்.

தேமுதிகவுடன் வருங்காலத்தில் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று ஜெயலலிதா கூறியிருந்தாரே?

ஜெயலலிதா வருங்காலம் என்று கூறியது அடுத்த தேர்தல்வரை என எடுத்துக் கொள்ளலாம். அதே நிலைப்பாட்டை நாம் என்றும் கொண்டு செல்ல முடியுமா?

ஆட்சி மன்றக்குழுவில் தேர்வு

சென்னை அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில்,அவைத் தலைவர் செங்கோட்டையன், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.வளர்மதி உள்ளிட்ட ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

காலை 9.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 10 நிமிடத்தில் முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவைத் தலைவர் செங்கோட்டையன், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிறுத்தப்படுகிறார்’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in