

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக, புகழ்பெற்ற திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் விளங்குகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. அதையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.
அதில், அதிகாலை 2.30 மணிக்கு மார்கழி மாத பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 4 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த காட்சியை, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கை கூப்பி வணங்கி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வருவதை பார்த்தால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்பது ஐதிகம். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களை தொலைக்கும் விதமாக நள்ளிரவு முதலே சொர்க்க வாசல் திறக்கும் பகுதியில் கூடியிருந்து தரிசித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக் காக அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் மற்றும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.