Last Updated : 11 Feb, 2017 11:17 AM

 

Published : 11 Feb 2017 11:17 AM
Last Updated : 11 Feb 2017 11:17 AM

யாருக்கு ஆதரவு?- வாக்காளர்களை நாடுகிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தனது வாக்காளர்களின் கருத்தைக் கேட்டு, யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மவுனமாக தியானத்தில் அமர்ந்ததும், 'கட்டாயப்படுத்தி தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றனர்' என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கவனம் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக அவர் பக்கம் வரத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்களும் அவரது அணிக்கு வந்தனர்.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவருடைய ட்வீட்டுக்கு, நடிகர் அரவிந்த்சாமி அளித்த பதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது வாக்காளர்களின் கருத்தை கண்டிப்பாக கேட்டு அம்மாவின் மதிப்பையும், அதிமுகவின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வண்ணம் முடிவெடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.

முன்னதாக, தன்னுடைய தொகுதிச் சென்று மக்களின் கருத்தைக் கேட்டு, அதையே சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவாக தெரிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாஃபா பாண்டியராஜனின் ட்வீட்:



Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x