

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி வழிந்தோடும் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மணலை சுரண்டியதால் பல இடங்களில் ஆற்றுப்படுகைகளில் குட்டைகள் உருவாகியிருக்கின்றன. தண்ணீர் ஓட வழியின்றி ஆங்காங்கே தேங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வாழ்வாதாரமான தாமிரபரணியில் மண்ணும், நீரும் அடைந்திருக்கும் இழப்பை ஈடுகட்ட இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் என்று, இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீவிர மணல் கொள்ளை
தற்போது வறட்சி நிலவும் நிலையில் தாமிரபரணி ஆறு பல்வேறு இடங்களில் ஓடைபோல் காட்சியளிக்கும் நேரத்தில், ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையின் தீவிரத்தையும் பார்க்க முடிகிறது. ஆற்றின் அடி வரை தோண்டி, ஆற்றை எதற்கும் பயன்படாத பள்ளமாக்கிவிட்டனர்.
திருநெல்வேலியை அடுத்த கருங்குளம் பகுதியில் ஆற்றுக்குள் அளவுக்கு மீறி மணலை வெட்டி எடுத்திருப்பதால் தண்ணீர் வழிந்தோட முடியாமல் ஆங்காங்கே குட்டைபோல் ஆறு உருமாறியிருக்கிறது. இதனால் குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் தண்ணீர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றுசேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்பு
ஆற்றை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துமேய்ந்து மணலை கொள்ளை அடித்ததால் நீரோட்டம் திசைதிருப்பப்பட்டதுடன், வெண் மணல் அள்ளிய இடங்களில் எல்லாம் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து காடாகி, மேடாகிப்போனது.
தாமிரபரணியில் அளவுக்கு அதிகமாக மணல் தோண்டப்பட்ட இடங்களில் உருவான பெரிய பள்ளங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகம். மணல் கொள்ளை நடக்கும்முன் ஆற்றில் அத்தகைய பள்ளங்கள் இருக்கவில்லை. எல்லோரும் பயமின்றி குளித்தனர். ஆனால் மணலை அள்ளி ஆற்றுக்குள் பெரிய பள்ளங்கள் உருவாக்கப்பட்டபின் அதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மக்களும் குற்றவாளிகள்
தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ந.காஜா முகைதீன் கூறும்போது, ‘ஒரே சீரான பாதையில் சீராக ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணிக்கு தற்போது தன்பாதை எதுவென்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் இழந்த ஆற்றில் ஊற்றுநீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது.
தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் சிறப்புமிக்க தாமிரபரணியை பாதுகாப்பதில் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் மட்டுமே குறைசொல்ல முடியாது. பொதுமக்களும் குற்றவாளிகள்தான். ஆற்றிலும், கால்வாய்களிலும், குளங்களிலும் கழிவுகளையும், குப்பைகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் கொட்டி வருகின்றனர்’ என்றார் அவர்.