

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அப்பல்லோ மருத்துவமனை இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு காய்ச்சல் குணமடைந்துவிட்டது. அவர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருகிறார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்று வைகைச் செல்வன் கூறினார். சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இதை உறுதிப்படுத்தினர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடக்க அதிமுக நிர்வாகிகளால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மதுரை, மேலூர், திருவாரூர், திருச்செந்தூர், விருதுநகர், ராஜபாளையம், திருத்தணி, வேதாரண்யம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, பரமக்குடி, புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்ணா சாலையில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டது.