Published : 24 Mar 2017 10:28 AM
Last Updated : 24 Mar 2017 10:28 AM

உள்ளாட்சி: அரசு திட்டப் பணிகள் அல்ப ஆயுளில் முடிவது ஏன்?

“மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் இந்தியாவில் ஏழ்மை குறைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் திட்டமும் வங்க தேசத்தில் பொதுச் சொத்துக்கள் திட்டமும் கிராமப் புறத்தில் வேலைவாய்ப்பையும் முன் னேற்றத்தையும் உருவாக்குவதற்கு உலகளவில் மிகச் சிறந்த உதாரணங்கள்” - சமீபத்தில் ஐக்கிய நாடு கள் மேம்பாட்டு திட்ட அமைப்பு வெளியிட்ட 2016-ம் ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு குறியீட்டு தர வரிசை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வரிகள் இவை.

இந்திய அரசியல் அமைப்பு சாசனம் உருவாக்கிய சட்டங்க ளும் திட்டங்களும் மக்கள் வளர்ச் சியை மனதில் கொண்டே உரு வாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதனை கையாள்வதில்தான் அரசு இயந்திரத்துக்கு அலட்சியம். ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். ஆங்கி லேய அதிகாரிகளை உயர்த்திப் பிடிப்பதாக நினைக்க வேண்டாம். ஆனால், நம் நாட்டில் நீர்நிலை கட்டு மானங்கள் மீது ஆங்கிலேய அதிகாரி கள் கொண்டிருந்த அக்கறையில் ஒரு சதவீதம்கூட இன்றைய அதி காரிகளுக்கு இல்லை என்பதே ஆதங்கம்.

பெரம்பலூர் பெருமாள் கோயி லின் பின்பக்கம் குளம் ஒன்று இருக் கிறது. 1911-ம் ஆண்டு அந்தக் குளத் துக்கு தண்ணீர் கொண்டு வர சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டது. அந்த ஆண்டு ஆங்கி லேய அரசு இந்தியாவின் நிர்வாகத் தலைநகரை கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றியிருந்தது. அதனை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்த ஜார்ஜ் 5-ம் மன்னர் டெல்லியில் தர்பார் நடத்தினார்.

அதனை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேய அதி காரிகள், அந்தப் பேரரசரின் பெய ரையே பெரம்பலூரில் உள்ள சிறு கால்வாய்க்கு வைத்தார்கள். ஜார்ஜ் வாய்க்கால் எனப்படும் அந்த 20 அடி கால்வாய் ஓடிய தடத்தைகூட இன்று காண முடியவில்லை. குளத்துக்கும் நீர்வரத்து நின்றுபோனது.

சிதம்பரத்தில் இருந்து குமராச்சி செல்லும் சாலையில் கீழக்கரை என்கிற இடத்தில் ஆங்கிலேயர் காலத் தில் அமைக்கப்பட்ட பழைய கொள் ளிடம் ஆற்றின் பாசன வாய்க்கால் களைச் சென்று பாருங்கள். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட அதன் உறுதித்தன்மையும் நீர் சுரங்கத் திட்டங்களும் பிரமிப்பைத் தருகின் றன. அவ்வளவு ஏன்? தாமிர பரணியில் பாண்டியர்கள் கட்டிய மருதூர் அணைக்கட்டு உள்ளிட்ட கட்டுமானங்கள்கூட காலத்தைக் கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன.

ஆனால், அதிநவீன தொழில்நுட்பங்களும் உலகமயமான பொருளாதார ஆதாரங்களும் கிடைக்கும் சூழலில் நீர்நிலைகளில் ஒரு மாதம் முன்பு நிறைவேற்றிய பணியைக்கூட பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் அரசாங்கம் கவனமாக பணிகளை 15 இனங்களாகப் பிரித்து சில பணிகளை பக்கா வேலை, கச்சா வேலை என்று குறிப்பிட்டு அவற்றுக்கான ஆயுள் காலத்தை நிர்ணயித்துள்ளது. தவிர, அந்த ஆயுள் காலத்தில் அந்தத் திட்டப் பணியால் ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கப்பெறும் பலன்களையும் ஆவணங்களில் பதிவு செய்ய வேண் டும் என்று குறிப்பிடுகிறது.

தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் பக்கா எனப்படும் முதல் தர வேலைகள் 15-25 ஆண்டுகளும், கச்சா எனப்படும் இரண்டாம் தர வேலைகள் 5-10 ஆண்டுகளும் ஆயுள் காலம் கொண் டிருக்க வேண்டும். காடு வளர்ப்புத் திட்டத்தில் நடப்படும் மரங்கள் 15-25 ஆண்டுகளும், பெரிய, சிறிய, குறு பாசன வாய்க்கால்கள் 15-25 ஆண்டுகளும் ஆயுள்காலம் கொண் டிருக்க வேண்டும்.

விவசாய நிலங் களில் மேற்கொள்ளப்படும் தோட்டக் கலைத் துறை பண்ணைகள் உரு வாக்குதல், மரம் நடுதல், நிலத்தைப் பண்படுத்துதல் ஆகியவற்றில் முதல் தரப் பணிகளின் ஆயுள் காலம் 15-25 ஆண்டுகளும், இரண்டாம் தரப் பணிகளின் ஆயுள் காலம் 10-15 ஆண்டுகளும் கொண்டிருக்க வேண்டும். பாரம்பரிய ஏரிகளைப் புனரமைத்தல், பழுது நீக்குதல், தூர் வாருதல் பணிகள் 10-15 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண் டிருக்க வேண்டும். நிலத்தை மேம்படுத்தல் பணியின் ஆயுள் காலம் 15-25 ஆண்டுகள் கொண்டிருக்க வேண்டும்.

வெள்ளத் தடுப்பு முதல் தரத் திட்டப் பணிகள் 10-15 ஆண்டுகளும், இரண்டாம் தரத் திட்டப் பணிகள் 5-10 ஆண்டுகளும் ஆயுள் காலம் கொண்டிருக்க வேண்டும். கிராம சாலைகளில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் 10-15 ஆண்டுகளும், கிராவல் கப்பிச் சாலைகள் 5-10 ஆண்டுகளும் ஆயுள்காலம் கொண் டிருக்க வேண்டும்.

கட்டிடங்களின் ஆயுள்காலம் 45-60 ஆண்டுகளும், இயற்கை உரம் தயாரிப்பது தொடர்பான கட்டுமான பணிகள் 5-10 ஆண்டுகளும் ஆயுள் காலம் கொண்டிருக்க வேண்டும். கால்நடை கொட்டகைகள் 10-15 ஆண்டுகளும், மீன்வளர்ப்பு குட்டைகள் 5-10 ஆண்டு களும் ஆயுள் காலம் கொண்டிருக்க வேண்டும். கடலோரங்களில் மீன் காய வைக்கும் களங்கள் 10-15 ஆண்டுகளும், மரப் பண்ணைகள் 15-25 ஆண்டுகளும் ஆயுள் காலம் கொண்டிருக்க வேண்டும். ஊரகக் குடிநீர் திட்டப் பணிகள் 3-5 ஆண்டு களும், கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் 10-15 ஆண்டுகளும் ஆயுள் காலம் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கண்டவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம். தூர் வாரிய ஏரிகளின் ஆயுள் காலம் 10-15 ஆண்டு கள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிறைய ஏரிகள் வேண்டாம், அப்படி தூர் வாரிய ஒரு ஏரியையாவது கண்ணில் காட்டுங்கள் பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் நூறு நாள் வேலை திட்ட கண்காணிப்புப் பணிகள் அனைத்தும் கணினி மய மாக்கப்பட்டன. அதற்கு முன்பு ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நினைத்தால் தனது கிராமத்தில் சுமார் 100 போலி வேலை அட்டைகளை உரு வாக்கி அதன் மூலம் பணத்தை கொள்ளையடிக்க முடியும். இன்று பயனாளிகளின் வருகைப் பதிவு, அவர்கள் வேலை பார்த்ததற்கான அளவு உள்ளிட்டவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

இவற்றை துணை வட்டார வளர்ச்சி அதிகாரியும், வட்டார வளர்ச்சி அதி காரியும் டிஜிட்டல் கையெழுத்திட்டு அங்கீகரித்தால் மட்டுமே சம்பளப் பட்டியல் சம்பந்தப்பட்ட மத்திய சர்வருக்கு செல்லும். பின்பு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும். மேற்கண்ட நடைமுறையில் பணி மேற்பார்வையாளர்கள் பயனாளிகள் செய்த பணியை அளவு எடுத்து குறிக்கும் இடத்தில்தான் மோசடி தொடங்குகிறது. நடக்காத பணிகளை நடந்ததுபோல அவர்கள் கணக்கு காட்டுவதை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கீகரிக்கிறார்கள்.

இதுவரை நடந்தது இருக்கட்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் வரும் 2017-18 நிதி ஆண்டுக்கான ஊதிய நிதிநிலை அறிக்கை கடந்தாண்டு அக்டோபர் மாதமே தயார் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 26-ம் தேதி கிராம சபை கூட்டங்களில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதனை சிறப்புக் கூட்டங்கள் மூலம் அதிகாரிகள் நிறைவேற்றியிருப்பார்கள். அந்தப் பணிகளையாவது கண்காணித்து கேள்வி கேட்கும் உரிமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு. குறைந்தபட்சம் உங்கள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும் செயலரிடமாவது கேள்வி கேளுங்கள். அவரின்றி அங்கு எதுவும் அசையாது!

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x