

தனியார் தொலைக்காட்சி நிறுவ னங்கள் தங்களது கட்டண பேக் கேஜில் பொதுமக்கள் அதிகம் பார்க்காத கூடுதல் சேனல்களை கட்டாயப்படுத்தி திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), புதிய வரைவு விதிகளை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதில், பொதுமக்கள் விரும்பும் சேனல்களை மட்டும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்க வேண்டும். ரூ.130 கட்ட ணத்தில் 100 இலவச சேனல்களை கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒரு கட்டண சேனலின் விலை ரூ.19-க்குமேல் இருந்தால் அதை பேக்கேஜில் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தனியார் தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு விதிக் கப்பட்டிருந்தன.
டிராயின் புதிய வரைவு விதிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன் றத்தி்ல் ஸ்டார் இந்தியா, விஜய் டெலிவிஷன் நெட்வொர்க் நிறு வனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தற்போது என்ன நிலை உள்ளதோ, அந்த நிலையே தொடர வேண்டும் என கடந்த ஜனவரி 9-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிராய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்த ரவை ரத்து செய்தது. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கட்டுப் படுத்தும் வகையில் டிராய் கொண்டு வந்த புதிய வரைவு விதிகளை முறையாக அறிவிப்பு செய்ய அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த மார்ச் 3-ம் தேதி டிராய் தனது புதிய வரைவு விதிமுறைகள் குறித்து மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்நிலையில், டிராயின் சீர் திருத்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டார் இந்தியா, விஜய் டெலி விஷன் நெட்வொர்க் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், கோபால் ஜெயின் ஆகியோர், ‘‘தனியார் தொலைக் காட்சி நிறுவனங்களின் நிகழ்ச்சி களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரம், உரிமை டிராய்க்கு கிடையாது. ஆகவே டிராய் கொண்டு வந்துள்ள புதிய வரைவு விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், டிராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர், ‘‘இந்தியாவில் மொத்தம் 250 நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்களும், 900 டிவி சேனல்களும், 1,500 எம்எஸ்ஓக்களும், 120 மில்லியன் சந்தாதாரர்களும் உள்ளனர். மக்க ளுக்கு சாதகமாக டிராய் கொண்டு வந்துள்ள புதிய வரைவு விதிகளை ஸ்டாரும், விஜய்யும் மட்டுமே எதிர்க்கின்றன. எனவே இதற்கு தடை விதிக்கக் கூடாது’’ என வாதிட்டனர். இதையடுத்து, டிராயின் நட வடிக்கைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசார ணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.