

விழுப்புரத்தில் கணித தேர்வு முடிவுக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய மாணவனை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் வேலு. மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் சூரிய பிரகாஷ் (16). விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சூரியபிரகாஷ் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் சூரியபிரகாஷை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் இரவு 10 மணியளவில் சூரியபிரகாஷ் பொது தொலைபேசி மூலம் தனது தந்தை வேலுவை தொடர்பு கொண்டு தன்னை 3 நபர்கள் கடத்திவைத்துள்ளனர். அவர்கள் இந்தியில் பேசுகிறார்கள். நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டான்.
இது தொடர்பாக விழுப்புரம் நகர போலீஸில் வேலு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சூரிய பிரகாஷ் எங்கிருந்து போன் பேசினான் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் கும்பகோணத்தில் இருந்து போன் பேசியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கோவை மாவட்டம் சிங்கா நல்லூரில் பள்ளி சீருடையுடன் நின்றிருந்த ஒரு மாணவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அவன் விழுப்புரத்தில் கடத்தப்பட்டதாக கருதப்படும் சூரிய பிரகாஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீஸார், விழுப்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கோவை சிங்காநல்லூர் சென்ற விழுப்புரம் போலீஸார் சூரியபிரகாஷை மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது: புதன்கிழமை சூரியபிரகாஷ் வகுப்பில் கணித தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வுக்கு சரியாக தயாராகாததால் அவனுக்குள் பயம் ஏற்பட்டுள்ளது. மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுவார்கள் என அஞ்சிய சூரியபிரகாஷ் பள்ளிக்கு கிளம்பும் முன்பே மளிகை கடை கல்லாவில் இருந்து பணத்தை எடுத்துள்ளான்.
பின்னர் தேர்வு எழுதிவிட்டு கும்பகோணம் சென்று தன் பெற்றோருக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தியதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளான். அங்கிருந்து கோவை வந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுற்றியபோது போலீஸாரிடம் பிடிபட்டான். அவனை எச்சரித்தும், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தோம் என்றனர்.