

தமிழக வறட்சி நிவாரணக் கணக்கெடுப்பில் கரும்பு விவசாயிகள் பலர் சேர்க்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் பிப்ரவரி 28, 2017 நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 18.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. தமிழகத்தில் 16 கூட்டுறவு, 3 பொதுத்துறை, 26 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 4 சர்க்கரை ஆலைகள் இயங்காமல் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் சுமார் 300 லட்சம் டன் உற்பத்தியான கரும்பு கடும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்ற காரணத்தால் தற்போது சுமார் 150 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கும், விவசாயக்கூலித் தொழிலாளிகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவு குறைந்த பட்சம் ரூபாய் 3,000. இந்நிலையில் மத்திய அரசு கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாயை நிர்ணயம் செய்தது. தமிழக அரசு - கரும்பு டன் ஒன்றுக்கு வாடகையாக ரூபாய் 100-ம், உற்பத்தி மானியமாக 450 ரூபாயும், மத்திய அரசின் ஆதார விலையான 2,300 ரூபாய் சேர்த்து மொத்தம் 2,850 ரூபாயை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க அரசு, பொதுத்துறை, தனியார் ஆலை நிர்வாகத்திற்கு ஆணைப்பிறப்பித்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள கரும்பு ஆலைகளின் நிர்வாகம் மத்திய அரசின் ஆதார விலையான 2,300 ரூபாயுடன் 125 ரூபாய் மட்டும் சேர்த்து மொத்தம் 2,425 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்த ஆதாரவிலையை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாகம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 600 கோடியையும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையான 300 கோடி ரூபாயும் காலம் தாழ்த்தாமல் வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் கரும்பு விவசாயத்தொழிலை நம்பியிருக்கின்ற சுமார் 6 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் வேலையிழந்து அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக வறட்சி நிவாரணக் கணக்கெடுப்பில் கரும்பு விவசாயிகள் பலர் சேர்க்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் கரும்பு உற்பத்திக்கு நவீன யுக்திகளையும், புதிய கருவிகளையும் பயன்படுத்தி உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்.
தமிழக அரசு - அரசு, ஆலை அதிபர்கள், விவசாயப் பிரதிநிதிகள் கொண்ட நிரந்தர குழு அமைத்து, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.