

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. 60 சதவீத பணிகள் பாதிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கிடைப்பதில் தாம தம் ஏற்படுவதால், மணல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலின் முக்கிய மூலப் பொருளான மணல் கிடைப்பது இப்போது குதிரைக் கொம்பாகியுள்ளது. 2015-ம் ஆண்டு தமிழகத்தில் 38 குவாரிகள் செயல்பட்டன. இப்போது விழுப்புரம் மாவட்டம் கந்தர்வக் கோட்டை, அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம், நாமக்கல் மாவட்டம் மோகனூர், திருச்சி மாவட்டத்தில் கொண்டையாம் பட்டி, திருவாச்சி, திருவேங்கிடமலை, சீனிவாசநல்லூர், சிறுகமணி, கரூர் மாவட்டம் சிந்தலவாடி, மாயனூர் ஆகிய 10 மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுவதால் மணலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
1 லோடு ரூ.30 ஆயிரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 10 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் 2 ஆயிரம் லோடுதான் கிடைக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் அதன் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம்.
புதிதாக 26 இடங்களில் மணல் குவாரியை திறக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப் பித்துள்ளது. ஆனால், இதற்கு அனுமதி வழங்க வேண்டிய மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்துக்கு தலைவர் நியமிக்கப்படாததால் புதிய மணல் குவாரிகளை திறக்க அனுமதி கிடைக்க வில்லை. இருமாதங்களுக்கு முன்பு ஒரு லாரி லோடு மணலின் (16 டன்) விலை ரூ.10 ஆயிரமாக இருந்தது. இப்போது இது ரூ.30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த மாதம் இது ரூ.60 ஆயிரத்துக்கு விற்கும் அபாயம் உள்ளது.
75 ஆயிரம் லாரிகள்
தமிழகத்தில் மணல் தொழிலை நம்பி 75 ஆயிரம் லாரிகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் 18 ஆயிரம் லாரிகள் இருக்கின்றன. மணல் தட்டுப்பாட்டால் மணல் லாரிகளுக்கு லோடு கிடைக்கவில்லை. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என மொத்தம் 10 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலு வலகக் கட்டண உயர்வு ஆகியவையும் மணல் லாரித் தொழிலை மேலும் நலிவடை யச் செய்துள்ளன. வட்டாரப் போக்குவரத்துக் கட்டணத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உயர்த்தவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்த உடனே உயர்த்திவிட்டனர். அதன்படி, ஒரு லாரிக்கான எப்.சி. கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏழு தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.63.50. மதிப்புக் கூட்டு வரி 7 சதவீதம் அதிகரித்ததால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 1-ம் தேதிமுதல் மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத் தொகை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வழியில் மணல் லாரி உரிமையாளர்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
10 ஆயிரம் தொழிலாளர்கள்
மணல் தட்டுப்பாடு குறித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.அய்யநாதன் கூறியதாவது:-
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால் 60 சதவீத கட்டுமானப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் 10 ஆயிரம் பேர் ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே நேரடியாக மணல் விற்க வேண்டும். அரசு என்ன விலை நிர்ணயித்தாலும் அதைக் கொடுக்க தயாராக இருக்கிறோம். மாவட்டந்தோறும் மணல் சேமிப்பு கிடங்கு (யார்டு) ஏற்படுத்தி அதன்மூலம் உரிய நேரத்தில் மணல் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அரசு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுப்பதற்காக இ-டெண்டர் முறையை சரிவர பின்பற்றுவதில்லை. ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தி இ-டெண்டர் முறையை சரிவர நடைமுறைப்படுத்தி ஒப்பந்ததாரருக்கு நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
18 ஆயிரம் பொறியாளர்கள் பாதிப்பு
சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறும்போது, “மணல் தட்டுப்பாட்டால் ஒரு சதுர அடியில் கட்டிடம் கட்டுவதற்கான செலவு ரூ.1,700-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட், இரும்பு கம்பி, கதவு, ஜன்னல், எலக்ட்ரிக்கல் உட்பட 262 மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றின் நேரடி தொழி லாளர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்துடன் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) இணைந்த 78 சங்கங் களைச் சேர்ந்த 18 ஆயிரம் பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பல குவாரிகளில் மேலும் மணல் எடுக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டதால் அவை மூடப்பட்டுவிட்டன. புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத் துக்கு விண்ணப்பித்துள்ளோம். ஆனால், சேகர் ரெட்டி பிரச்சினைக்கு பிறகு அந்த ஆணையத்துக்கு தலைவர் இல்லை. அதற்கு தலைவர் நியமிக்கப்பட்டு புதிய மணல் குவாரிக்கு அனுமதி கிடைத்த பிறகே மணல் தட்டுப்பாடு குறையும். கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழ் நாட்டிலும் “எம்-சாண்ட்” பயன்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்றார்.
எம்-சாண்ட்
ஆற்று மணலுக்கு மாற்றாக கருங் கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப் படும் மாற்று மணலே “எம்-சாண்ட்” எனப்படு கிறது. கட்டுமானத் துறையின் தரக் கட்டுப்பாடான “ஐ.எஸ். 383” தரத்திலே இந்த மணல் இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகில் மிக உயரமான கட்டிடமான, துபாயில் இருக்கும் “புர்ஜ் கலீபா” எம்-சாண்ட் கொண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.