

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரி வித்து கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் 2-வது நாளாக தமிழகப் பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன.
ஓசூரையொட்டி கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி நகரம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை திரண்ட கர்நாடக விவசாய சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம் மையை எரித்தனர். போராட்டத் தில் ஈடுபட்ட 100-க்கும் அதிக மானோரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி எஸ்பி மகேஷ் குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் ஓசூர் எல்லைப் பகுதியில் தீவிர பாது காப்பில் ஈடுபட்டனர். தமிழக பேருந்துகள் 2-வது நாளாக நேற் றும் ஓசூர் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணி கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சுமார் 45 கர்நாடக மாநில பேருந்து கள் பெங்களுருவில் இருந்து ஓசூர் நகரப் பேருந்து நிலையம் வரை எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து இயக்கப்பட்டன. பெங்களுரு நகருக்கு தமிழக பேருந்துகள் இயக்கப்படாததால் இந்த வாய்ப்பை தனியார் பேருந்து கள் பயன்படுத்திக்கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டன. அதிகமான கட்டணம், அதிகமான பயணிகளுடன் தனியார் பேருந்துகள் இடைவிடாமல் தொடர்ந்து இயங்கின. இவற்றில் பெரும்பாலானவை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாய சங்கங்களின் சார்பில் நாளை (9-ம் தேதி) கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வரை தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாரிகளை இயக்க வேண்டாம்
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் நாளை மட்டும் கர்நாடக மாநிலத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.