

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்து உட்கொள்ளக்கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஏ(எச்1என்1)எனப்படும் இன்ஃப்ளு யன்சா வைரஸ் கிருமிகளால் ஏற்படும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் பின்பற்ற வேண்டியவை: காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்துகள் உட்கொள்ளக்கூடாது. நோய் அறிகுறி தென்பட்டவுடன் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும். பள்ளி, அலுவலகம், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இருமல், தும்மலின்போது வாய், மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும். பயன்படுத்திய கைக்குட்டை, இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்தவும்.
இந்த காய்ச்சல் வராமல் தடுக்க கைகளைக் கழுவாமல் மூக்கு, வாய், கண்களைத் தொடக்கூடாது. ஃப்ளு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மற்றவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு விலகி நோய்ப்பரவலைத் தவிர்க்கலாம். நோய் அறிகுறி இருந்தால் மற்றவர்களிடம் கை குலுக்குதல், தழுவுதலை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 10-ல் இருந்து 12 முறை, ஒவ்வொரு முறையும் 15-ல் இருந்து 20 விநாடிகளுக்கு நன்றாக கைகளை சோப்பு மூலமாக கழுவ வேண்டும்.
பேருந்துகள், ரயில்கள், மாடிப்படி, எஸ்கலேட்டர், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுன்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள சுவிட்சுகள், திரை அரங்கு, பொது இடங்களில் உள்ள இருக்கைகள், கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த காய்ச்சலுக்கான டாமிஃப்ளு மாத்திரைகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இலவசமாக வழங்கப்படு கின்றன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான இலவச பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.