

வேளாண்மை ஆராய்ச்சிக்காக ரூ.7.67 கோடி மதிப்பில் ‘மனோசாட்’ எனப்படும் செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து துணைவேந்தர் கி.பாஸ்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.14 கோடியில் 3 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பல்நோக்கு அரங்கம் அமையவுள்ளது. ரூ.2.70 கோடியில் ஆசிரியர், மாணவர் மற்றும் அலுவலர் நலக் கட்டிடம் கட்டப்படும். ரூ.13.50 கோடியில் 3 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள சோலார் மின் உற்பத்தி அமைப்பு நிறுவப்படும்.
விளையாட்டு கிராமம்
ரூ.1.86 கோடியில் பல்கலைக் கழக தென்கிழக்கு எல்லையில் தார் சாலை மற்றும் ரூ.1.44 கோடியில் மதில் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. ரூ.200 கோடி மதிப்பில் அனைத்து உபகரணங்களையும், வசதிகளையும் பெறும் வகையில் மையம் மற்றும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு கிராமம் அமைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப் பட்டுள்ளது.
ரூ.6 கோடி மதிப்பில் நீச்சல் குளம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஆகிய வற்றை பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் பெயரில் இயற்பியல் மற்றும் புவி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த 2 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.16 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செயற்கைக்கோள்
வானிலை மாற்றம் குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க, ரூ.7.67 கோடி மதிப்பீட் டில் ‘மனோசாட்’ எனப்படும் செயற்கைக்கோளை இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துருவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறோம். ஜப்பான், ஜெர்மன், சீன மற்றும் கொரிய மொழிகளை கற்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தேர்வாணை யர் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.3 வரை அவகாசம் நீட்டிப்பு
ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. வரும் ஏப்ரல் மாத பருவ தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 29-ம் தேதி நடைபெறும் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தோல்வியுற்ற பாடங்களை அவர்கள் விரும்பும்போது எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு சான்றிதழ் கட்டணம் ரூ.500 ஆக இருந்ததை ரூ.325 ஆக குறைத்துள்ளோம். புரபசனல் சான்றிதழுக்கு ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது.
அந்தந்த கல்லூரிகளிலேயே விடைத்தாள்களை திருத்தும் முறையை அறிமுகம் செய்திருந்தோம். தற்போது அதில் மாற்றம் செய்து, ஏற்கெனவே இருந்த முறைப்படி ஒரே மையத்தில் விடைத்தாள் திருத்தும் முறையை மீண்டும் அமல்படுத்துகிறோம். விடைத்தாள் திருத்துவதற்கான மதிப்பூதியம் ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி அளிக்கப்படும் என்றும் துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார்.