Last Updated : 25 Jun, 2017 10:46 AM

 

Published : 25 Jun 2017 10:46 AM
Last Updated : 25 Jun 2017 10:46 AM

நீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

பள்ளிகளில் கற்பிக்கும் முறை சரியில்லாததால் நீட் தேர்வில் தமிழகம் பின்தங்கியது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் மாநிலப் பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டத்தில் படிக்கும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் விண் ணப்பித்தனர். இதில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. ஆனால், தேர்வில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் அவர்கள் கூறிய தாவது:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன்:

மத்திய, மாநில பாடத்திட்டங்கள் இடையே பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் ஒன்றுதான். நமது மாநில பாடத் திட்டத்தில் கற்பிக்கும் முறையும், கற்கும் முறையும் சரியில்லை. பல பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில், அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவதே இல்லை. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு, பிளஸ் 1-ல் பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றனர். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முன்னிலை பெறாததற்கு இதுவே முக்கிய காரணம். கல்வி முறையில் தற்போதுதான் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நீட் தேர்வில் நமது மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களின் எண்ணிக்கை குறை வாகவாகத்தான் இருக்கும்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்:

நமது மாநிலப் பாடத்திட்டம் நன்றாக இருக்கிறது. ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்குப் புரியும்படி சொல்லித் தருவதில்லை. அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மாண வர்களுக்கு மனதளவில் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால்தான் இதுபோன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க முடியவில்லை. இது மாற வேண் டும். நீட் தேர்வு எழுதிய 88 ஆயிரம் பேரில் எத்தனை பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களைவிட, மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது.

அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம்:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மாநில அரசுக்கு 85 சதவீத இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டு, மற்ற இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்களுக்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மாண வர்கள் பயனடைவார்கள். இல்லா விட்டால், பெரும்பாலான இடங் களை மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்களே பிடிக்கக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x