

40 வழக்குகளுக்கு மேல் உள்ள பிரபல ரவுடி டோரி பாபுவுக்கு கொலை வழக்கு ஒன்றில் 14 ஆண்டு சிறை தண்டனை அளித்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு சென்னை சேத்துபட்டு பகுதியில் வேணு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி டோரி பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஜெய்சங்கர் சிறப்பாக செயல்பட்டு வாதாடி தண்டனை பெற்றுத்தந்தார்.
இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை செஷன்ஸ் 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கீழ்பாக்கம் உதவி ஆணையர் ராஜா ஏற்கனவே தகுந்த ஆதாரத்துடன் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி புவேனேஸ்வரி குற்றவாளி டோரி பாபுவிற்கு 14 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து கொலை குற்றவாளி டோரி பாபு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி டோரி பாபு மீது சென்னையில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.