ஷவரில் குளிப்பதை நிறுத்திவிட்டேன்; வீதியில் இறங்கிப் போராட பயமில்லை: கமல்ஹாசன் பேட்டி
தண்ணீர்ப் பிரச்சினையால் ஷவரில் குளிப்பதை நிறுத்திவிட்டேன், மக்கள் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட பயமில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பிரதான கட்சிகள் கிராம சபைக் கூட்டங்களை அதிக அளவில் கண்டுகொள்ளாத நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு தன் கட்சியினருக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இதன் ஓர் அங்கமாக அனைத்து கிராம சபைக் கூட்டங்களையும் ஒருங்கிணைத்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் பொதுமக்களிடம் கமல் உரையாடினார். அப்போது உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கடல் நீரைக் குடிநீராக்குவதை விட, மழைநீரைச் சேகரிப்பது சிறந்தது. முறையாக மழைநீரை சேமித்து வைத்திருந்தால், மக்கள் தண்ணீருக்காக வீதியில் இறங்க வேண்டிய தேவை இல்லை. கடந்த ஓராண்டாக ஷவர் தண்ணீரில் குளித்து வந்தேன். ஆனால் இப்போது வாளித் தண்ணீரில் மட்டுமே குளிக்கிறேன்.
மக்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கிப் போராட, எனக்கு பயம் இல்லை. அவ்வாறு பயும் இருந்தால், பிரதமரையும் முதல்வரையும் விமர்சிக்க மாட்டேன். ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆள்சேதம் இல்லாமல், துப்பாக்கிச் சூடு இல்லாமல், அழுத்தமாக மக்கள் குரல் கேட்பதற்கான ஜனநாயக வாய்ப்பு, கிராம சபைக் கூட்டங்கள். மக்களின் குரலைக் கேட்டவிடாமல் அரசு தடைசெய்து கொண்டிருக்கிறது.
சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மனநோயாளிகள். நிறைய பேர் என்ன செய்தால் புகழ் கிடைக்கும் என்று எல்லையே இல்லாமல் இருக்கிறார்கள். கொலை செய்தால் பிரபலம் அடையலாம் என்றால், கொலையும் செய்வார்கள். அந்தளவுக்குத் தனிமைப்பட்டுப் போன மனநோயாளிகள். அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை'' என்றார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகர்ப்புற பகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அதேபோல் கிராமங்களிலும் கட்சியை வலுப்படுத்த அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும் பங்கேற்று, கிராம மக்களின் குரலை ஒலிக்க தன் கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
