Published : 28 Jun 2019 09:29 AM
Last Updated : 28 Jun 2019 09:29 AM

செல்போன், வீடியோ கேம் வேண்டாமே!- ஓடியாடி விளையாடு பாப்பா

உடலை அசைக்காமல் செல்போன், வீடியோ கேம் மட்டும் விளையாடுவது எந்த வகையிலும் பயனற்றது, ஆரோக்கியத்துக்கு எதிரானதும்கூட. எனவே, உடலுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை ஓடியாடி விளையாட வேண்டும். இது, உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கும். அதனால்தான், உடலுக்கு வேலை தரும் விளையாட்டுகளை நடத்துகிறோம்” என்கின்றனர் தாட்ஸ் என்டெர்டெயின்மென்ட் உரிமையாளர் கிருஷ்ணவேணி மற்றும்  அவரது கணவரும், நிர்வாகியுமான சிவசங்கரன் ஆகியோர்.

கண்காட்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்கள், ஜவுளி நிறுவனங்களின் கோடை கொண்டாட்டம் உள்ளிட்ட திருவிழாக்களில், பல்வேறு விளையாட்டுகளைக் காணமுடியும். பெரிய மால்களிலும், வணிக நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர், வீடியோ கேம்களை சிறுவர், சிறுமிகள் விளையாடும் சூழலில், உடலுக்கும், புத்திக்கும் வேலை தரும் இந்த விளையாட்டுகளை நடத்தும் கிருஷ்ணவேணி, சிவசங்கரனை, கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில், விளையாட்டுப் பொருட்களை குவித்து வைத்திருந்த கிடங்கில் சந்தித்தோம். சிவசங்கரன் பேச்சைத் தொடங்கினார்.

முதல் முயற்சி தோல்வி...

“கரூர்தான் எனக்கு சொந்த ஊர். எம்.டெக். படித்துவிட்டு, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தேன். 2014-ல் ஏதாவது தொழில் செய்யலாம் எனக் கருதி, கோவை வந்தோம். பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் அல்லது பலூனை துப்பாக்கியால் சுடுதல், அம்புவிடுதல் ஆகியவை மட்டுமே கண்ணில் பட்டது. 2015-ல் 30 விளையாட்டுகளுடன், ஒரு விளையாட்டு நிறுவனத்தை தொடங்கி, ஈவன்ட் மேனேஜர்கள் மூலம் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு தேடினோம்.  பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை. 6 மாதங்களுக்குமேல் தொழிலை நடத்த முடியவில்லை.

இதை மூட்டைகட்டிவிட்டு, நானும், எனது மனைவியும் அமெரிக்காவில் வேலை பார்க்கச் சென்றுவிட்டோம். 2017-ல் மீண்டும் கோவை திரும்பினோம். 2018 ஜனவரியில் மீண்டும் விளையாட்டு நிறுவனத்தை தொடங்கினோம். பழைய தோல்வியில் கிடைத்த அனுபவம், இந்த முறை ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க உதவியது. 2018 ஏப்ரல் மாதம் தாட்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற விளையாட்டு நிறுவனத்தை  பதிவு செய்தோம். ஆரம்பத்தில் ப்ரோஜோன்மால் மற்றும் டெக்லத்தான் விளையாட்டு நிறுவனத்தினர், நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புக் கொடுத்தனர். தொடர்ந்து, பல்வேறு ஜவுளி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், கண்காட்சிகளில் விளையாட்டுகளை நடத்துகிறோம். கோவை ஈவன்ட் மேனேஜர்ஸ் சங்கம் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகிறது.

210 விளையாட்டுகள்...

தற்போது எங்களிடம் 75-க்கும் மேற்பட்ட வகையான, 210-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. இவற்றில் எதுவுமே வீடியோகேம், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்டது கிடையாது. பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், லூடோ, தஞ்சாவூர் தாயம், டெக்ஸ்ரிட்டி, கல்பட்டோ, கர்லிங், பிக் க்ளவுன் மவுத் பீடர், பிரெயின் வீடா, க்ரேசி ட்ரைவ், புல் ரைடு, பிக் பாலர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. மேலும், குதித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொண்ட 30 விளையாட்டுகளும் உள்ளன.

ஒரு அடிக்கு ஒரு அடி அகல, நீளம் கொண்ட விளையாட்டு முதல், 1,600 சதுர அடியிலான விளையாட்டுகள் வரை உள்ளன. மிகப் பெரிய விளையாட்டு டிஸ்னி ஃபன் சிட்டி விளையாட்டாகும். பெரும்பாலான விளையாட்டுகளை மரத்தச்சர் மூலம் நாங்களே உருவாக்குகிறோம். பெரிய விளையாட்டுகள் சிலவற்றை மட்டும் சீனாவிலிருந்து தருவிக்கிறோம். விளையாட்டு உபகரணங்களைப் பொருத்தவரை பாதுகாப்பு அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறோம். தண்ணீர் விளையாட்டுகள் உட்பட பல விளையாட்டுகளும் இருக்கின்றன. மின் வயர்கள் உள்ளிட்ட அனைத்துமே வாட்டர் ப்ரூஃப் தன்மைகொண்டவையாக, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வைத்திருக்கிறோம்.

வியர்க்க வேண்டியது அவசியம்!

பள்ளித் திருவிழாக்கள், ஜவுளிக் கடைகளில் நடைபெறும் திருவிழாக்களில் 40 வகையான விளையாட்டுகளுடன், ஆட்டம்-பாட்டம், பலூன் உடைத்தல் என வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். ஒருமுறை விளையாட்டு நடத்தியபோது, குழந்தைகள் ஓடியாடி விளையாடியதில், வியர்வை கொட்டியது. அப்போது அங்கு வந்த சில பெற்றோர், என்ன “வியர்க்க வியர்க்க விளையாட வைக்கிறீர்கள்?” என்று குற்றம்சாட்டும் தொனியில்  கேட்டார்கள். “உடலில் இருந்து வியர்வை வரும் அளவுக்கு விளையாடுவதே சிறந்த விளையாட்டு, வெறுமனே

செல்போன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள் உடலுக்கு ஆரோக்கியம் தராது” என்று அவர்களுக்குப் புரியவைத்தோம். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியேபோகக் கூடாது என்று குழந்தைகளை மிரட்டிய காலம்போய்,

தற்போது “ஏன், செல்போன், கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு, வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய், கொஞ்சம் வெளியில்போய் விளையாடு” என்று சொல்லும் அளவுக்கு, குனிந்த தலை நிமிராமல் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். இது கண்ணுக்குமட்டுமல்ல, உடலுக்கும், சிந்தனைக்கும் கேடானது.

சம்பளத்துக்கு வேலை செய்தது போதும், ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தபோதே, மக்களுக்கு நலன் பயக்கும், உடல் நலனை ஆரோக்கியமாக வைக்க உதவும் வகையில் தொழில் செய்ய வேண்டுமென முடிவெடுத்தோம். அதன் விளைவுதான் இந்த விளையாட்டு நடத்தும் நிறுவனம். எங்கள் கிடங்கில் இருந்து விளையாட்டு உபகரணங்களை எடுத்துக்கொண்டு, திருவிழா, நிகழ்ச்சி  நடக்கும் இடத்துக்குச் சென்றபின்னர், சுமார் அரை மணி நேரத்தில் அவற்றை நிறுவிடுவோம். தற்போது 4 பேர் நிரந்தரமாகவும், பகுதிநேர அடிப்படையில் 25-க்கும் மேற்பட்டோரும் எங்களுடன் இணைந்து பணிபுரிகின்றனர். கோவை மட்டுமின்றி, சீர்காழி, திருச்சி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

உடலுக்கும், மனதுக்கும் வேலை கொடுக்கும் பாரம்பரிய விளையாட்டுகள், கவனத்தை வளர்க்க உதவும். நிதானம், பொறுமை, நேர மேலாண்மையைக் கற்றுக்கொடுக்கும். சில விளையாட்டுகள் வேகத்தையும், விவேகத்தையும் வளர்க்கும்.

உதவிய எம்.எஸ்.எம்.இ.!

இந்த நிறுவனத்தைத் தொடங்கும்போது, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (எம்.எஸ்.எம்.இ.) உதவியது. பெண் தொழில்முனைவோர் என்ற முறையில், கனரா வங்கிக் கடனுதவி, மத்திய அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கிடைத்தது. ஓராண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.

பொதுமக்களிடையே உடலுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் 75 வகையான விளையாட்டுகள் எங்களிடம் மட்டுமே இருக்கிறது என்பது பெருமையளிக்கிறது. உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க வேண்டுமென்பதே எங்கள் லட்சியம். அதில், இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில், மிகத் தரமான, நவீன முறையிலான  விளையாட்டுகள் இடம்பெறச் செய்வோம்” என்றனர் சிவசங்கரன்-கிருஷ்ணவேணி தம்பதியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x