Published : 28 Jun 2019 07:54 AM
Last Updated : 28 Jun 2019 07:54 AM

அத்திவரதர் எழுந்தருள தயார் நிலையில் ஏற்பாடுகள்: வசந்த மண்டபத்திலும் அலங்காரப் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் எழுந்தருளும் விழா ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்காக கடந்த 40 ஆண்டுகளாக அனந்தசரஸ் குளத்துக்குள் மூழ்கிய நிலையில் இருக்கும் அத்திவரதரை வெளியில் எடுப்பதற்கு குளத்தில் உள்ள தண்ணீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு விட்டது.

அந்தக் குளத்துக்குள் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபம்வரை மணல் மூட்டைகள் மூலம் பாதை அமைக்கப்பட்டு அதன் மீது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. குளத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அத்திவரதர் வெளியில் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்.

இந்தக் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று (ஜூன் 28-ம் தேதி) நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அத்திவரதர் எழுந்தருளும் விழாவில் இந்த அபிஷேகம் முடிந்த பிறகே அத்திவரதரை வெளியில் எடுத்துள்ளனர். எனவே ஜூன் 28-ம்தேதி நள்ளிரவு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்திவரதரை வெளியே எடுப்பதை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. வெளியில் எடுக்கப்படும் அத்திவரதர் சிலையில் 2 தினங்களுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் ஜூலை 1-ம் தேதி எழுந்தருளச் செய்யப்படும்.

அப்போது முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனம் உண்டு. சில நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்வதற்கான சிறப்பு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் செய்துவிடுவது நல்லது.

தகவல் மையம்

அத்திவரதர் விழா நடைபெறும் நாட்களில் மக்களின் வசதிக்காக கோயிலில் தகவல் மையம் அமைக்கப்படுகிறது.

மேலும் விழா தொடர்பான தகவல் வேண்டுவோர் ஜெ.சுரேஷ்குமார் (ஆய்வர்-காஞ்சிபுரம்) - 9047705278, உலகளந்த பெருமாள் கோயில் செயல் அலுவலர் ப.கவிதா - 7845803608, ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் த.வெங்கடேஷ் குமார் - 8838256689, பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக் கோயில் செயல் அலுவலர் ம.அமுதா - 8489615791 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விடுதி கட்டணம் உயர்வு

அத்திவரதர் விழாவையொட்டி வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலர் காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு விடுதிகளை நாடுவர். இதைக் கருத்தில் கொண்டு பல விடுதி உரிமையாளர்கள் விடுதிக் கட்டணத்தை 2 மடங்கு வரை உயர்த்தியுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.1,250 முதல் ரூ.1,350 வரை வாடகை உள்ள விடுதி அறைகளுக்கு தற்போது ரூ.3,500 வரை கட்டணம் கேட்கப்படுகிறது.

இது தொடர்பாக பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அறைகள் காலி இல்லை என்று கூறிவிடுவதாக கூறப்படுகிறது. விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்த பிறகும் பல விடுதிகளில் 48 நாட்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 48 நாட்களில் விடுதிகளில் மாவட்ட நிர்வாகம் திடீர் ஆய்வை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x