

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பேரூராட்சிப் பகுதிகளில் அதிக அளவாக 73 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஊராட்சிகளில் 68, நகராட்சிகளில் 65, மாநகராட்சிகளில் 51.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை மாநகராட்சி மேயர்கள், சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவற்றுக்கான வார்டுகளில் காலியாக இருந்த சுமார் 2 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தத் தேர்தலை திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் அதிமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது. சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. நெல்லை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதவிர சங்கரன்கோவில், குன்னூர் உள்ளிட்ட 4 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 500 பதவிகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீதமுள்ள 530 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்தப் பதவிகளுக்கு 1,486 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நகரப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற பிரச்சினை எழுப்பப்பட்டது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து ‘தி இந்து’விடம் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் எதுவுமின்றி தேர்தல் மிக அமைதியாக நடந்தது. தூத்துக்குடி மேயர் தேர்தலில் 53.89 சதவீத வாக்குகளும், கோவை மேயர் தேர்தலில் 46.51சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நகராட்சித் தலைவர் பதவிகளைப் பொறுத்தவரை கடலூரில் 59.62%, விருத்தாச்சலத்தில் 64.73%, அரக்கோணத்தில் 45% மற்றும் ராமநாதபுரத்தில் 55.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஊராட்சிப் பகுதிகளில் இரவு 8 மணி வரை கிடைத்த தகவல்படி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பேரூராட்சி பகுதிகளில் 73.34 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். மாநகராட்சிகளில் குறைந்த அளவாக 51.93 சதவீத வாக்குகளே பதிவாகின. சென்னையில் ஒரு வார்டுக்கு நடந்த இடைத்தேர்தல் (35-வது வார்டு) 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கடலூரில் ஒரு வார்டு உறுப்பினர் தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுவரை வந்த தகவல்படி எந்த இடத்திலும் மறுதேர்தல் நடத்த தேவை ஏற்படவில்லை. வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு சோ.அய்யர் கூறினார்.
வாக்குப்பதிவு நடந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. சென்னை உட்பட சில இடங்களில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாகக் கூறி பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட பாஜக பெண் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்களும், வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் அந்தந்தப் பகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.